1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகள் செய்து தரப்படும் : அமைச்சர் தங்கம் தென்னரசு

1

அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாஞ்சோலையிலுள்ள பி.பி.டி.சி. தேயிலை நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 99 ஆண்டு காலக்குத்தகை 11-02-2028 அன்று முடிவடைவதைக் கருத்திற்கொண்டு, மேற்படி நிறுவனம் மார்ச், 2024-ல் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 559 தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. 

அப்போதே, அரசு சார்பில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டரால் சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் தலைமையில்  சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது. அக்குழு, தொழிலாளர்கள் மற்றும் அங்குள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தது.

 இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஞ்சோலை தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்ட அறிக்கைகள், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை விரிவாகப் பரிசீலித்து, அவர்களுக்கு அரசின் சில விதிகளை தளர்வு செய்து பல்வேறு உதவிகளை வழங்கிட உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, அவர்களுக்கு பின்வரும் உதவிகளை வழங்கிட உத்தரவு வழங்கப்பட்டு, அதனடிப்படையில் நீதிமன்றத்திலும் அவை மாவட்ட கலெக்டரால் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கிராமப் பகுதிகளில் குடியேற விரும்பும் வீடற்ற தொழிலாளர்களுக்கு தற்போதைய அரசு விதிமுறைகளைத் தளர்வு செய்து சிறப்பினமாகக் கருதி அவர்களின் விருப்பத்தின் பேரில் இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லம்  திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு தயார் நிலையிலுள்ள அம்பாசமுத்திரம் வட்டம், பாப்பாங்குளம் கிராமத்தில் 240 அடுக்கு மாடி வீடுகள் மற்றும் திருநெல்வேலி மாநகரம், ரெட்டியார்பட்டி பகுதியில் பணி முடிவடையும் நிலையிலுள்ள அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் விருப்பமுள்ள, ஏற்கனவே வீடு இல்லாத மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி ஒதுக்கீடு செய்யப்படும்.

தொழிலாளர்களில், 55 வயதிற்குட்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த வாழ்வாதார வசதி தேவைப்படும் தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் புதிய தொழில் தொடங்க 35 சதவீத மானியம் மற்றும் 6 சதவீத வட்டிச் சலுகையுடன் சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.

இதர பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்  கீழ் 25 சதவீத மானியம் மற்றும் 3 சதவீத வட்டி சலுகையுடன் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.

தகுதியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மையம்  மூலம் திறன் பயிற்சி வழங்கப்படும்.

திறன் பயிற்சி முடிப்பவர்களுக்கு தனியார் துறையில் உரிய வேலைவாய்ப்புப் பெற்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். சிறிய பால் பண்ணைகள் அமைத்தல், கறவை மாடுகள், ஆடுகள் வாங்குதல் ஆகியவற்றிற்காக ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் வட்டியில்லாக்கடன் வழங்கப்படும்.

பெண்களுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ரூ.1.50 லட்சம் வரை சிறு கடன்கள் வழங்கப்படும். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பும் அரசுப் பள்ளியில் அவர்களைச் சேர்க்கவும், அரசு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழிலாளர்கள் குடியேற விரும்பும் முகவரிக்கு அவர்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை சிறப்பு முகாம்கள் மூலம் சிரமமின்றி மாற்றம் செய்து தரப்படும். 

தொழிலாளர்களுக்கு நிறுவனம் வழங்க வேண்டிய மீதமுள்ள 75 சதவீத கருணைத் தொகை நீதிமன்ற உத்தரவுபடி வழங்கிடவும், அவர்களுக்கு விதிப்படி வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ பலன்களும் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்திட தொழிலாளர் நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like