குட் நியூஸ்..! விரைவில் ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் கிடைக்கும் : மனோ தங்கராஜ்!
ஆவின் நிறுவனம் சார்பில், பொதுமேலாளர் மற்றும் துணை பதிவாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். ஆய்வு கூட்டத்துக்கு பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆவின் பொருட்களை தீவிர சந்தைப்படுத்துவது குறித்து உத்தரவு இந்த ஆய்வு கூட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆவின் பொருள்களை அறிமுகம் செய்து, அதனை தீவிர சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பால் அளவு குறையாமல் சரியான அளவில் பராமரிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நியாய விலைக் கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. இது எந்த விதத்திலும் ஆவின் பாலகத்தை பாதிக்காது. ஊரகப்பகுதி, சிறிய நகரப்பகுதியில் பால் பொருட்கள் விற்பனை செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.
காக்களூர் பால் பண்ணையில் பால் பாக்கெட் உற்பத்தியின் போது, இயந்திரத்தின் கன்வேயர் பெல்டில் சிக்கி, பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக நிலையான இயக்கக செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கன்வேயர் பெல்ட்டுக்கு மாற்றாக, தானியங்கி கன்வேயர் இயந்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். முதல்கட்டமாக 3 ஆலைகளில் கன்வேயர் தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அடுத்தகட்டமாக மற்ற இடங்களிலும் அறிமுகப்படுத்த முயற்சி எடுப்போம். தானியங்கி இயந்திரம் தான் மனித விபத்தை தடுக்க நிரந்தர தீர்வு.
கிருஷ்ண ஜெயந்திக்கு தள்ளுபடி விற்பனை அறிவித்திருந்தோம். இதுபோல, அனைத்து பண்டிகைகளுக்கும் இதை செயல்முறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் விற்பனையில் சிறப்பான செயல்பாட்டை வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.