1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 4 புதிய குளங்கள்..!

1

சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் உள்ளது. 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குதிரை பந்தயம் நடத்த ஏதுவாக 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் கடந்த 1945 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த குத்தகை காலம் வரும் 2044 ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை உள்ளது.

இந்த நிலையில் தான், ரூ. 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி ரேஸ் கோர்சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை சுவாதீனம் எடுக்கலாம், அந்த நிலத்தை அரசு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஸ் கிளப்புக்கான குத்தகையை ரத்து செய்து தமிழக அரசு, ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்தது. 1970 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு வாடகை பாக்கித் தொகையாக ரூ.730 கோடியை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையும் ரேஸ் கிளப்பில் வைக்கப்பட்டது.

இந்த ரேஸ் கிளப்பில் ரூ.4,832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலத்தை தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறைக்கு நிலமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சென்னையில் மிகப்பெரிய அளவிலான பசுமைப் பூங்காவை உருவாக்க உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரேஸ் கிளப்பில் ஏற்கனவே மூன்று குளங்கள் உள்ள நிலையில், புதிதாக 4 குளங்களை வெட்டும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

தற்போது உள்ள 3 குளங்களில் 30 மில்லியன் லிட்டர் வரை தண்ணீரை சேமிக்க முடியும். புதிய குளங்கள் அமைக்கப்படுவதன் மூலமாக 100 மில்லியன் லிட்டர் வரை தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளங்களை வெட்டும் பணி தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பருவமழைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தற்போது முழு வீச்சில் குளங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

Trending News

Latest News

You May Like