குட் நியூஸ்..! 300 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை..!
தமிழ்நாட்டில் மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி தேவைப்படும் நிலையில், தற்போது வரத்து குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று மொத்த விற்பனையில் தக்காளி கிலோவிற்கு 100 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 140 ரூபாயாகவும் விற்பனையாகி வந்தது. இன்றைய நிலவரப்படி கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை ₹100-க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் 10 ரூபாய் குறைந்து 130 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 220 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அத்துடன் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையில் நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 300 நியாய விலை கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் மட்டும் நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் மேலும் 300 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.