1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! 20,332 அரசுப் பள்ளிகளில் அதிவேக இணையதள வசதி..!

1

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது. இதை கருத்தில் கொண்டு, முதல்வரின் சீரிய முயற்சியால் தமிழக அரசு தற்போது தொழில்நுட்ப விரிவாக்க நிகழ்வை ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையாக மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், புத்தகங்கள் மற்றும் கரும்பலகைகள் வாயிலாக நடைபெற்ற கற்றல் கற்பித்தல் நிகழ்வின் ஓர் உச்சமாக உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் தகவலைப் பெற்று பாடப் பொருள்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், பெற்ற தகவல்களை தக்க வைத்துக் கொள்ளவும் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்கவும் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும், 22,931 திறன்மிகு வகுப்பறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் 46 லட்சத்து 12 ஆயிரத்து 742 மாணவ, மாணவியர் பயனடைவர். மேலும், 6,023 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் அதிவேக இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தலை எளிமையாக்கும் பொருட்டு பாடப் பொருள்கள் அனைத்தும் காணொலி வாயிலாக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும், மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல்கள், மொழி ஆய்வகச் செயல்பாடுகள், மனவெழுச்சி நலன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் மாணவர்களுக்கான மதிப்பீடுகள் போன்றவை உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. 

மேற்கண்ட செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதற்கு ஏற்கெனவே இருந்த அதிவேக இணைய வேகத்தை மேலும் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் 46 லட்சம் மாணவர்கள் கடினமான பாடப் பொருட்களை எளிமையாக காணொலி வாயிலாக கற்பதற்கும் மாணவர்கள் கற்ற பாடங்களை ஆன்லைன் மதிப்பீடுகள் மூலமாக பயிற்சிகள் மேற்கொண்டு பாடக் கருத்துக்களை தெளிவாக கற்பதற்கும், உயர்கல்வி வழிகாட்டுதல்களை எளிமையாகப் பெறுவதற்கும், ஆங்கிலத்தில் மொழிப் புலமை பெற மொழி ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கும், கணிப்பொறி சார்ந்த திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் வழிவகை ஏற்படும்.

தமிழக அரசு, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து இணைய வசதியை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள  6,223 அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 5,913 பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அதே போல் மொத்தமுள்ள 6,992 நடுநிலைப்பள்ளிகளில் 3,799 பள்ளிகளில் இணையவசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும், தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரையில், மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில் 10,620 பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இப்பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு, எஞ்சியுள்ள 17,221 அரசு பள்ளிகளுக்கு ஜுன் 2-வது வார இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இதன் வாயிலாக, 2024-2025-ம் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மன நிலையோடு கல்வி கற்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like