குட் நியூஸ்..! தீபாவளி முதல் 2 சிலிண்டர்கள் இலவசம் : உ.பி அரசு அதிரடி..!

உத்தர் பிரதேச அரசு தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஒரு வருடத்தில் இரண்டு இலவச எல்.பி.ஜி சிலிண்டர்களை வழங்குவதாக கூறியிருந்தது, அதன்படி இந்த வாக்குறுதியை நிறைவேறும் விதமாக இந்த முறை தீபாவளியில் பெண்களுக்கு இரண்டு இலவச எல்.பி.ஜி சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இத்திட்டம் தொடர்பான முன்மொழிவு குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்தி, இத்திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை உத்தர் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ், இந்த முறை தீபாவளியன்று அரசு பயனாளிகளுக்கு ஒரு இலவச சிலிண்டரையும், ஹோலி பண்டிகைக்கு மற்றொரு இலவச சிலிண்டரையும் வழங்கலாம். இதற்கான முழு ஏற்பாடுகளையும் யோகி அரசு தற்போது செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடியே 75 லட்சம் கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முறை தீபாவளியை முன்னிட்டு, முதல்முறையாக கேஸ் சிலிண்டர்களுக்கான பணத்தை அரசு கணக்குகளுக்கு மாற்றவுள்ளது. இந்த பணம் டிபிடி மூலம் கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களின் கணக்குகளுக்கு மாற்றப்படும்.
முன்னதாக கடந்த சட்டசபை தேர்தலையொட்டி, ஹோலி மற்றும் தீபாவளியன்று பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதாக பா.ஜ.க பொது நல தீர்மான கடிதத்தில் அறிவித்திருந்தது. இத்திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.3301.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உஜ்வாலா யோஜனா என்றால் என்ன?:
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டம், கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு கேஸ் இணைப்பு மற்றும் சிலிண்டர்கள் வழங்குப்படுகிறது. இப்போது உஜ்வாலா 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் முதல் கட்டமாக 2016 முதல் 2019 வரை 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு விரைவான எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2023, மார்ச் 1 நிலவரப்படி 9.59 கோடி பேர் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.