குட் நியூஸ்..! இனி வாரந்தோறும் 1000 மருத்துவ முகாம்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகரில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் நடைபாதையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று காலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் டெங்கு பரவல் உள்ளது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களை கட்டுப்படுத்துவதற்காக வருகிற 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் டிசம்பர் 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பத்து வாரங்கள் வாரம் தோறும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் வீதம் பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். இந்த முகாம்களில் பொதுமக்கள் இலவசமாக பரிசோதனை செய்வது முதல் மருந்து மாத்திரைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் என்பது ஜப்பான் நாட்டிற்கு சென்றிருந்த போது அங்கு அரசு சார்பில் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கான நடைபாதை சிறப்பாக அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பார்த்தேன்.
அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவர் அதே போல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பதற்கு உத்தரவிட்டார். அதன்படி 38 மாவட்டங்களிலும் எட்டு கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நடைபாதைகள் குண்டு குழிகள் இல்லாமல் ஏற்ற இறக்கங்களும் சமம் செய்யப்பட்டு நடப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் நடந்து செல்பவர்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
அந்த இருக்கைகள் அருகில் அது அமர்வதற்கான இடம் என்பதை குறிக்கும் வகையில் அழகிய சிலை ஒன்றும் அமைக்கப்படும்.நடைபாதையில் இரு பக்கமும் பசுமையான மரங்கள் இடம்பெறுகிறது. நடந்து செல்பவர்கள் தங்கள் செல்ல பிராணிகளையும் அழைத்து செல்லலாம். அதை நினைவுபடுத்தும் வகையில் செல்ல பிராணியுடன் நடந்து செல்வது போன்ற காட்சியும் இடம்பெறும்.
ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திலும் கிலோ மீட்டரை குறிக்கும் அறிவிப்பு பலகை மற்றும் நடந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய அறிவிப்புகளும் இடம்பெறுகிறது. எட்டு கிலோ மீட்டர் தூரம் என்று அமைப்பதற்கு காரணம் எட்டு கிலோ மீட்டர் தினமும் நடந்தால் 10 ஆயிரம் அடிகள் நடப்பதாகும். இது உடலுக்கு சிறந்த பயிற்சியை தரும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கும். 38 மாவட்டங்களிலும் இந்த நடைபாதைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நவம்பர் 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள எட்டு கிலோமீட்டர் நடை பாதையில் சிறிது தூரம் நடந்து சென்று கடற்கரையில் அமைக்கப்படும் மேடையில் இருந்தபடி ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள நடைபாதைகளையும் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மற்றும் பொதுமக்களும் பங்கேற்கிறார்கள்.பெசன்ட் நகரில் நடிகர், நடிகைகள், பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். பெசன்ட் நகரில் நடந்து செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்தப் பாதையில் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.