பிரபல கோத்ரெஜ் நிறுவனம் இரண்டாக பிரிந்தது..!

1897ல் தொடங்கப்பட்ட கோத்ரேஜ் நிறுவனம் சோப்பு, வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் ரியல் எஸ்டேட் தொழில் வரை பல துறைகளில் முதலீடு செய்து தற்போது வரை லாபகரமாக வெற்றிநடைபோடுகிறது. தற்போது, ஆர்தேஷிர் கோத்ரேஜ் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு, 2 குழுக்களாகப் பிரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மூத்த சகோதரரின் பிள்ளைகள் ஒருபுறமும், இளையவரின் பிள்ளைகள் இன்னொரு பக்கமும் என பிரிகிறார்கள்.
இதன்படி ஆதி கோத்ரெஜ் மற்றும் அவரது சகோதரர் நாடிர் ஆகியோர் கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை வைத்துக்கொள்கின்றனர். அவர்களின் குடும்ப உறவினர்களான ஜாம்ஷித் மற்றும் ஸ்மிதா ஆகியோர் பட்டியலிடப்படாத கோத்ரெஜ் மற்றும் போய்ஸ் உள்ளிட்ட துணை நிறுவனங்கள், மும்பையில் உள்ள பிரதான சொத்துக்கள் போன்றவற்றை பெறுகிறார்கள்.
கோத்ரெஜ் ஆலமரத்தின் ஆதி கோத்ரெஜ் (82) மற்றும் அவரது சகோதரர் நாதிர் (73) ஒருபுறமும், அவர்களது உறவினர்கள் ஜம்ஷித் கோத்ரெஜ் (75) மற்றும் ஸ்மிதா கோத்ரெஜ் கிருஷ்ணா (74) மறுபுறமுமாக இரண்டாக சொத்துக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமம் என்பது கோத்ரெஜ் மற்றும் போய்ஸ் துணை நிறுவனங்களை உள்ளடக்கியது. அவை விண்வெளி, விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் என பல துறைகளில் முன்னிலையில் உள்ளன.
இதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ஜம்ஷித் கோத்ரெஜ் இருப்பார்; அவரது சகோதரி ஸ்மிதாவின் மகள் நைரிகா ஹோல்கர் நிர்வாக இயக்குநராக இருப்பார். மும்பையில் உள்ள 3,400 ஏக்கர் பிரதான நிலம் உள்ளிட்ட சொத்துக்களும் இந்த வகையில் அவர்களை சேரும்.
கோத்ரெஜின் நுகர்வோர் தயாரிப்புகள், கோத்ரெஜ் பிராப்பர்டீஸ், கோத்ரெஜ் அக்ரோவெட் மற்றும் அஸ்டெக் லைஃப் சயின்சஸ் உள்ளிட்ட கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்துக்கு நாதிர் கோத்ரெஜ் தலைவராக இருப்பார்.
மேலும் இந்த குழுமம் ஆதி, நாதிர் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்பத்தினரால் கட்டுப்படுத்தப்படும். ஆதியின் மகன் பிரோஜ்ஷா கோத்ரெஜ், இந்த குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவராக இருப்பார். மேலும் நாதிர் கோத்ரெஜ் வகிக்கும் தலைவர் பொறுப்பில் ஆகஸ்ட் 2026-க்குப் பின்னர் பிரோஜ்ஷா கோத்ரெஜ் அலங்கரிப்பார்.
கோத்ரெஜ் இரண்டாக பிரிந்தாலும், பிளவுற்ற இரு குழுமங்களும் கோத்ரெஜ் பிராண்டைத் தொடர்ந்து பயன்படுத்துவதோடு, பகிரப்பட்ட பாரம்பரியத்தை வளர்ப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளன.