உடனே போங்க..! அபூர்வ மரகத நடராஜரை நாளை வரை மட்டுமே தரிசனம் செய்ய ஏற்பாடு..!

உலகின் முதல் சிவன் கோவில் என கருதப்படும் திருஉத்திரகோசமங்கை திருத்தலத்தில் அமைந்துள்ள நடராஜர் சிலை. இங்குள்ள நடராஜரின் திருமேனி, மிகவும் அரிய மரகத கல்லால் ஆனதாகும். மரகத கல் என்பது மிகவும் மெல்லிய தன்மை கொண்டதாகும். சிறிய அதிர்வுகள் ஏற்பட்டால் கூட சேதமடையும் தன்மை கொண்டது என்பதால் தான் உத்திரகோசமங்கையில் பூஜையின் போது கூட மேள தாளங்கள் இசைப்படுவது கிடையாது. அதோடு இங்குள்ள நடராஜரின் திருமேனி வருடத்தின் அனைத்து நாட்களும் சந்தன காப்பு சாத்தி பாதுகாக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோவிலில் தான் இந்த அபூர்வ மரகத நடராஜர் சிலை உள்ளது. வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை மார்கழியில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் அன்று மட்டுமே நடராஜரின் திருமேனியில் சாத்தப்பட்டுள்ள சந்தனக்காப்பு களையப்பட்டு, நடராஜரின் பச்சை திருமேனியை தரிசனம் செய்ய முடியும். இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி தான் நடராஜரின் சந்தனக்காப்பு களையப்பட்டு, பக்தர்களுக்கு மரகத நடராஜரின் தரிசனம் காட்டப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 04ம் தேதி உத்திகோசமங்கை கோவிலில் கும்பாபிஷேகம் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. இதன் காரணமாக மரகத நடராஜரின் சந்தன காப்பு களையப்பட்டு, நடராஜரின் மரகத திருமேனியை தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த திருக்காட்சி இந்த ஆண்டு இரண்டு முறை கிடைக்க உள்ளது.
ஏப்ரல் 04ம் தேதி மாலை வரை சந்தன காப்பு களையப்பட்டு மரகத திருமேனியாக நடராஜர் காட்சி அளிக்க உள்ளார். அதற்கு பிறகு நடராஜரின் திருமேனி மீண்டும் சந்தன காப்பால் மூடப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாய்ப்பு இருக்கும் பக்தர்கள் நேரில் சென்று மரகத நடராஜரை தரிசனம் செய்து விட்டு வரலாம். ஏப்ரல் 04ம் தேதி மாலை சந்தன காப்பு சாத்தப்பட்ட பிறகு நடராஜரின் சன்னதி அடைக்கப்பட்டு விடும். பிறகு மீண்டும், 2026ம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் அன்று தான் இந்த நடராஜரின் சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு, சந்தன காப்பு களையப்பட்டு, பக்தர்களுக்கு மரகத திருமேனியாக நடராஜரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
உத்திரகோசமங்கை மரகத நடராஜரை தரிசனம் செய்தால் நவகிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு வழிபடுபவர்களுக்கு முக்தியும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.