1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடி வருகை - மதுரையில் 'Go Back Modi' போஸ்டர்களால் பரபரப்பு!

மோடி

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை வரும் நிலையில், மதுரை முழுக்க கோ பேக் மோடி என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி இன்று மதுரை வரும் நிலையில், அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புதுச்சேரி மற்றும் தஞ்சாவூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, தஞ்சாவூர் விமானப் படைத் தளத்திலிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2:45 மணிக்கு பிரதமர் மதுரை வந்தடைகிறார். மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத் துறை நிகழ்ச்சியில் பங்கேற்று, சுமார் ₹4,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அரசு நிகழ்ச்சிக்குப் பிறகு, அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று பிரதமர் சாமி தரிசனம் செய்கிறார்.

மாலை 4:30 மணிக்கு மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் பிரம்மாண்டமான தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் மேடை பகிர உள்ளனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'Go Back Modi' என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்தப் போஸ்டர்களில், "தமிழ்நாடு ஒற்றுமையாக நிற்கிறது, மத ரீதியான மூளைச் சலவை வேண்டாம்", "திருப்பரங்குன்றம் உங்களை வரவேற்கவில்லை" போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் போஸ்டர்களால் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க மதுரை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like