ஒழுங்கா என் போனை கொடு... இல்லாவிட்டால் கொன்றுவிடுவேன் – தலைமை ஆசரியரை மிரட்டிய பள்ளி மாணவன்!

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டுவரக் கூடாது என்ற உத்தரவு அனைத்து பள்ளிகளிலுமே அமலில் இருக்கிறது.
இதே போன்று தான் கேரள மாநிலம் பாலக்காடு அனக்கரா அரசு பள்ளியிலும் மாணவர்கள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் அந்தப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் ஒரு மாணவன், பள்ளிக்குச் செல்போன் கொண்டுவந்தபடி இருந்திருக்கிறான்.
இதனைக் கவனித்த வகுப்பாசிரியர்கள், அந்த மாணவனைச் செல்போன் கொண்டுவரக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் அந்த மாணவன், செல்போனை பள்ளிக்குக் கொண்டுவந்து வகுப்பறையில் பயன்படுத்தியபடி இருந்திருக்கிறான்.
சம்பவத்தன்றும் அந்த மாணவன் வகுப்பறையில் வைத்துச் செல்போனை பயன்படுத்தியிருக்கிறான். அதனைப் பார்த்த ஆசிரியர், அந்த மாணவனிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தார்.
ஆசிரியர் செல்போனை பறித்ததால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், ஆசிரியரிடம் தகராறு செய்திருக்கிறான்.
பின்பு அந்தச் செல்போன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், நேராகத் தலைமை ஆசிரியரின் அறைக்கு ஆவேசமாக வந்தான்.
பின்பு தலைமை ஆசிரியரின் எதிரே இருந்த இருக்கையில் தோரணையாக அமர்ந்துகொண்டு பேசினான்.
அப்போது தனது செல்போனை திருப்பித் தந்து விடுமாறு தலைமை ஆசிரியரிடம் ஆக்ரோஷமாகச் சத்தமாகக் கேட்டான். மாணவனின் இந்தச் செயல்பாட்டைத் தலைமை ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
ஆக்ரோஷமாகப் பேசிய மாணவரிடம் தலைமை ஆசிரியர் எதுவும் பேசவில்லை.
இருந்த போதிலும் அந்த மாணவன் ஆக்ரோஷம் பொங்கி பேசியபடியே இருந்தான். மேலும் தனது செல்போனை தந்து விடுமாறு கேட்டான். ஆனால் அதற்குத் தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவித்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், “எனது செல்போனை திரும்பத் தராவிட்டால் பள்ளியை விட்டு வெளியே வரும்போது கொன்று விடுவேன்” என்று தலைமை ஆசிரியரைப் பகிரங்கமாக மிரட்டினான்.
பின்பு தலைமை ஆசிரியரின் அறையிலிருந்து வேகமாக வெளியேறினான். “கொன்று விடுவேன்” என்று பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த போதிலும், மாணவனின் எதிர்காலம் கருதி அவன்மீது பள்ளி தரப்பில் போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.
அதே நேரத்தில் அந்த மாணவனின் பெற்றோரைப் பள்ளிக்கு வரவழைத்து, அவனது ஒழுக்கக்கேடான செயலைப் பற்றிக் கூறினர்.
இந்தநிலையில் தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று, அவரிடம் ஆவேசமாகப் பேசி மாணவன் கொலைமிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
செல்போன் பயன்பாடு ஒரு மாணவனை எந்த அளவுக்கு ஆக்ரோஷமடைய செய்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அந்த வீடியோ இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாது.