2 நாள் டைம் கொடுங்க... தேர்தல் கூட்டணியில் மாற்றம் வரும்... அண்ணாமலை சூசகம்..!

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக உட்கட்சி பிரச்சனையில் சிக்கித் தவித்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அதேநேரத்தில் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி முறிந்து தனித்தனியே களம் கண்டன.இந்த நிலையில் அதிமுகவின் அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைத்து ஒன்றிணைந்த அதிமுக- பாஜக கூட்டணியை எப்படியாவது உருவாக்கிவிட வேண்டும் என்பதில் டெல்லி பாஜக மேலிடம் தீவிரம் காட்டியது. அதிமுகவுக்குள்ளேயயும் இந்த கருத்தை மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ இதுவரை பாஜகவுடன் கூட்டணியே இல்லை என திட்டவட்டமாக கூறி வந்தார்.
இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அடுத்த 2 நாட்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்; அவரது வருகைக்குப் பின்னர் பல மாற்றங்கள் நிகழும் என அதிரடியாக தெரிவித்தார்.
அதேநேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவை வீழ்த்துவதற்கு அண்ணா திமுக தயாராக உள்ளது; எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான்; மற்ற எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது.. புரியுதா? திமுகவை வீழ்த்த வேண்டும்;அதுதான் எங்களது குறிக்கோள்; ஓட்டுகள் சிதறாமல் சிதறக் கூடிய ஓட்டுகளை எல்லாம் ஒருங்கிணைத்து திமுகவை வீழ்த்துவதுதான், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதுதான் அண்ணா திமுகவின் தலையாய கடமை. அதுதான் 2026 சட்டசபை தேர்தலில் நடக்கும் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு கடந்த வாரம்தான் அமித்ஷா வருகை தந்திருந்தார். கோவையில் சிவராத்திரி விழாவில் பங்கேற்றிருந்தார் அமித்ஷா. தற்போது மீண்டும் தமிழ்நாட்டுக்கு அமித்ஷா வருகை தருவதாக அண்ணாமலை அறிவித்திருப்பதும் திமுகவை வீழ்த்துவது மட்டும்தான் ஒரே குறிக்கோள்; திமுகவை தவிர எந்த கட்சியுமே எதிரியே இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதும் மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணிக்கான முன்னறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு அமித்ஷா வருகை தரும் போது அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் அல்லது சந்திப்புகள் நிகழலாம் எனவும் கூறப்படுகிறது. அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமைந்தால் அந்த அணியில் பாமக, டிடிவி தினகரனின் அமமுக, தமாகா உள்ளிட்டவை இடம் பெறும் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.