1. Home
  2. தமிழ்நாடு

செப்டிக் டேங்கில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் புதிய திருப்பம்..!

1

விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார் லியா லட்சுமி. இவர் நேற்றைய தினம் பள்ளிக்குச் சென்றார். அவரை தந்தை பழனிவேல்தான் பள்ளியில் விட்டுவிட்டு தனது வேலைக்குச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் மதியம் 1.45 மணிக்கு சிறுமி சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறி ஆசிரியையிடம் சொன்னார். அவரும் சிறுமியை கழிப்பறைக்கு செல்ல அனுமதித்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தை மீண்டும் வகுப்புக்கு வராததால், ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்து கழிப்பறையில் தேட சென்றார். அப்போது அங்கு இருந்த செப்டிக் டேங்க் மீது போடப்பட்டிருந்த துருப்பிடித்த இரும்பு மூடி உடைந்து காணப்பட்டதை கண்டார். ஒரு வேளை குழந்தை செப்டிக் டேங்கில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பள்ளி ஓட்டுநர் கோபாலை அழைத்து செப்டிக் டேங்கில் தேட சொல்லியுள்ளனர்.

 

அப்போது அந்த செப்டிக் டேங்கில் சிறுமியின் ஷூ இருந்ததை கண்டறிந்தார். உடனே அங்கிருந்த கம்பியை எடுத்து குழந்தையின் ஆடையை பிடித்து இழுத்து மேலே தூக்கினார். பிறகு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பழனிவேல், மருத்துவமனையில் தனது குழந்தையின் உடலை கட்டி அணைத்துக் கொண்டு எழுந்திரும்மா அப்பாவுடன் வீட்டுக்கு போய்விடலாம் என கண்ணீர் மல்க கதறி அழுதார். இதுகுறித்து பழனிவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் குழந்தை இயற்கையான முறையில் இறக்கவில்லை, என் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

செப்டிக் டேங்க் அருகே கிடந்த குழந்தையின் உள்ளாடை நனையாமல் காய்ந்த நிலையில் இருந்தது குறித்தும் பெற்றோர் சந்தேகம் எழுப்புகிறார்கள். சிறுமியின் தந்தை புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய மூவரையும் நள்ளிரவு 2 மணிக்கு போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள், அப்பகுதி மக்கள் விழுப்புரம்- சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.அப்போது போராட்டக்காரர்கள் கூறுகையில், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் 6 மாதத்திற்கு ஒரு முறை பள்ளியை வந்து ஆய்வு செய்ய வேண்டும். எல்கேஜி, யுகேஜி குழந்தை இயற்கை உபாதை கழிக்க செல்லும் போது ஒரு ஆயாம்மா இருக்க வேண்டாமா, பள்ளிக்கு எவ்வளவு காசு வாங்குகிறார்கள். ஏன் அந்த இத்து போன மூடியை கூட மாற்றாமல் இவர்கள் என்ன நிர்வாகம் நடத்துகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News

Latest News

You May Like