இதை தெரிஞ்சிக்கோங்க..! திருமணத்திற்கு இந்த பொருத்தம் இருந்தால் போதும்..!

திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருவரது நட்சத்திரங்கள், ராசி போன்றவற்றைக் கொண்டு பொருத்தம் பார்த்து பொருந்திய பிறகே திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இருமனம் இணையும் திருமணத்தின் இணைவை அவர்களது ஜாதகப் பொருத்தமே தீர்மானிக்கிறது. பெண் பார்க்கும் படலம் முடிந்ததுமே பெற்றோர்கள் எதிர்தரப்பினரிடம் ஜாதகத்தை பரிமாறிக்கொள்கிறார்கள். ஒரு வருக்கொருவர் பிடித்திருந்தாலும் ஜோதிடர் ஜாதகத்தை அலசி பொருத்தங்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தான் மேற்கொண்டு திருமணம் பற்றிய பேச்சு அடிபடும்.
திருமணத்துக்கு மொத்தம் பத்து பொருத்தங்கள் பார்க்கப்படும். பத்துப் பொருத்தங்கள் இல்லையென்றாலும் முக்கிய பொருத்தங்கள் பொருந்தி வந்தால் மட்டுமே இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது. தினப்பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திர பொருத்தம், ஸ்த்ரீ தீர்க்க பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப்பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், வாதைப் பொருத்தம் என மொத்தம் பத்து பொருத்தங்கள் பார்க்க வேண்டும்.
இதில் முக்கியமான பொருத்தங்கள் தினபொருத்தம், கணப்பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம். இவற்றிலும் முக்கியமானது யோனிப்பொருத்தமும், ரஜ்ஜுப்பொருத்தமும். ஒன்று இல்லையென்றாலும் கூட இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது. இவர்கள் இருவரின் வாழ்க்கைக்கு உயிர் நாடி இவைதான்.
இருவரது ஆயுள், ஆரோக்கியம், குணம், குழந்தைபாக்கியம், செல்வம், தாம்பத்யம், வம்சவிருத்தி, இருவரது ராசிக்கும் பகை, இருவருக்குள் அந்நியோன்யம், கணவனுக்கு ஆயுள் பலம், வாழ்வில் நடக்கவிருக்கும் இன்பம், துன்பம் போன்றவற்றை அலசி ஆராய்ந்து தான் மேற்கண்ட பத்து பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தப் பத்து பொருத்தங்கள் மட்டும் போதாது என்று சொல்லும் பெரியோர்கள் மேலும் சில பொருத்தங்களையும் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.
ஆண், பெண் ஜாதகங்கள் பலம் வாய்ந்த ஜாதகங்களா என்பதை ஆய்வு செய்வது முக்கியம். இருவருடைய ஆயுளும் பலமாக இருக்கவேண்டும். இல்லறம் சிறக்க தாம்பத்யம் இனிக்க கணவன், மனைவி அந்நியோன்யமாய் வாழ இருவரது ஜாதகத்திலும் சுக்கிரன் நல்ல திசையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் நிரந்தரமான திருமண வாழ்க்கைக்கு சனியும், செவ்வாயும் லக்னாதிபதிகளாக இருப்பது அவசியம். இருவரது ஜாதகங்களிலும் குரு வலுப்பெற்று சுக்கிரனைப் போன்று செவ்வாயும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
அடுத்தடுத்து வரும் ராசிகளில் இருப்பவருக்கு திருமணம் செய்தால் ஜாதகப்படி சனிதிசை நடக்கும்போது இருவருமே சிரமப்படுவார்கள். மேலும் இருவரது ஜாதகமும் சுத்தமான ஜாதகமா? செவ்வாய் மற்றும் நாகதோஷம் ஏதேனும் உள்ளதா என்றும் பார்க்கவேண்டும். இதன் பிறகு தான் பத்து பொருத்தங்கள் பற்றி பார்க்க வேண்டும்.