இதை தெரிஞ்சிக்கோங்க..! இ-சேவை மையம் மூலம் எல்எல்ஆர் பெறலாம்..! எப்படி விண்ணப்பிப்பது..!
டிரைவிங் லைசென்ஸ் (ஓட்டுநர் உரிமம்) எடுப்பதற்கு முன்பாக பழகுநர் உரிமம் பெற்று வாகன ஓட்டுநர் பயிற்சி எடுக்க வேண்டும். அந்தவகையில், LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் இணையச் சேவை மையங்களையும் பொதுமக்கள் அணுக வேண்டிய நிலை இருந்தது.
இதில், தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்பட்டது. மேலும், இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமலும் இருந்த நிலையில், அதில் முக்கிய மாற்றத்தை போக்குவரத்து துறை கொண்டு வந்தது.
எல்எல்ஆர் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவது குறித்து எந்தவிதப் புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் இதனை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையைக் கொண்டு சேர்ப்பதற்கும், தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்தது.
அதன்படி, மாநிலம் முழுவதிலுமுள்ள 55,000க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வசதியைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு அருகாமையிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் இனி LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையினைப் பெறுவதற்குப் பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக் கட்டணமாக ரூ.60-ஐ செலுத்த வேண்டும்.ஒப்புதல் அளிக்கப்பட்ட LLRஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.