இதை தெரிஞ்சிக்கோங்க..! உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் இருக்குனு இப்படி கண்டுபிடிக்கலாம்..!
நவீன யுகத்திற்கு ஏற்ப தொலைதொடர்புகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் ஒருவர் பல மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஒரு தொலை தொடர்பில் சரியான சிக்னல் இல்லை, சரியான சலுகை கட்டணம் இல்லையென அங்கிருந்து வேறொரு நிறுவனத்தின் தொலை தொடர்புக்கு மாற்றப்படும் போது பழைய எண்களை விட்டு விட்டு புதிய எண்களுக்கு மாறுவார்கள்.
இதனால் பல சிம்கார்டுகள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனை தடுப்பதற்காக ஒரே எண்ணை வைத்துக்கொண்டு போர்ட் முறையில் வேறொரு நிறுவனத்திற்கு மாற முடியும்.
இருந்த போதும் குடும்ப சூழல், காதல் தோல்வி, கடன் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களுக்காக ஒருவர் பழைய எண்களை பயன்படுத்தாமல் புதிது,புதிதாக எண்களை மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். இது பெரிய அளவில் பாதிப்பு இல்லையென்றாலும் தீவிரவாத சம்பவத்தில் ஈடுபடுபவர்களும் பல எண்களை பயன்படுத்தி சதி வேலையில் ஈடுபடுகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் நம் நாட்டில் 2023 ஆம் ஆண்டின் தொலைத்தொடர்புச் சட்டத்தின்படி, ஒரு நபர் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச சிம் கார்டுகளின் எண்ணிக்கையை கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. மேலும் இந்த விதிகளை மீறினால் கடுமையான அபராதம் அல்லது சிறைத்தண்டனை கூட ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதொடர்புத் துறை (DoT) வழிகாட்டுதல்களின்படி, ஒரு யூசர் ஒரு ஐடியில் ஒன்பது மொபைல் எண்கள் வரை பெறலாம். புதிய சிம் கார்டுகளை வழங்குவதற்காக டெலிகாம் ஆபரேட்டர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் முக்கிய ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்றாகும்.
மற்றவர்களின் ஆதார் தகவல்களை பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. எனவே ஒருவரின் ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை மொபைல் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்க்க, டெலிகாம் அனாலிடிக்ஸ் ஃபார் பிராடு மேனேஜ்மென்ட் & கன்ஸ்யூமர் ப்ரொடக்ஷன் என்ற ஆன்லைன் போர்ட்டலை DoT அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் ஆதார் கார்டை வைத்து எத்தனை சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன?, எவ்வாறு சரிபார்க்கலாம்? என்பது பற்றி பார்ப்போம்.
1. TAFCOP-இன் https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்கிற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
2. அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பாக்ஸில் உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்யவும்.
3. கேப்ட்சாவை டைப் செய்து “ரெக்யூஸ்ட் OTP” என்பதை கிளிக் செய்யவும்.
4. OTPஐ டைப் செய்து “லாகின்” என்பதை கிளிக் செய்யவும்.
5. உங்கள் ஐடியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களின் பட்டியலைக் காண்பீர்கள்.
6. ஆக்டிவாக உள்ள அனைத்து மொபைல் எண்களை நீங்களோ அல்லது உங்கள் உறவினர்களோ பயன்படுத்துகிறீர்களா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளவும்.
7. ஏதேனும் சந்தேகம் இருந்தால், அந்த மொபைல் நம்பரை நீங்கள் பிளாக் செய்து விடலாம். அதற்காக இந்த இணையதளம் உங்களுக்கு 3 விருப்பங்களை வழங்குகிறது. அவை “நாட் மை நம்பர்”, “நாட் ரெக்யூர்ட்” மற்றும் “ரெக்யூர்ட்” ஆகியனவாகும்.
TAF-COP போர்டலில் உங்களுடையது அல்லாத எண்களை புகாரளிக்கவும், தடுக்கவும் உங்களை அனுமதிக்கிறது.