இதை தெரிஞ்சிக்கோங்க..! காசோலையின் பின்பக்கம் கையொப்பம் போடசொல்வது ஏன் தெரியுமா..?
காசோலைகள் பல வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. காசோலைகளைப் பயன்படுத்துவதில் சில விதிமுறைகளும் உள்ளன. காசோலையின் பின்புறத்தில் கையொப்பமிடும் விஷயத்திலும் சில விதிமுறைகள் உள்ளன. காசோலையின் பின்புறத்தில் ஏன் கையெழுத்திட வேண்டும் என்ற கேள்வி பலரிடம் இருக்கும். கையொப்பமிடப்படாவிட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அதுபற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்
நீங்கள் ஒரு காசோலையை பரிவர்த்தனைக்காக வழங்குகிறீர்கள் என்றால், அத்தகைய சந்தர்ப்பத்தில் காசோலையின் பின்புறத்தில் கையொப்பமிடுவது அவசியம். ஏனெனில் பல சமயங்களில் அப்படிப்பட்ட காசோலைகளில் யாருடைய பெயரும் எழுதப்படுவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், காசோலையை டெபாசிட் செய்த நபருக்கு அது சிக்கலை ஏற்படுத்தும். அதை பாதுகாப்பாக வைக்க, காசோலையின் பின்புறத்தில் காசோலையை கொண்டு வரும் நபரின் கையொப்பத்தை வங்கிகள் கேட்கின்றன.
எந்த காசோலையில் பின்புறம் கையொப்பம் போட வேண்டும்? எந்த காசோலையில் அது தேவையில்லை என்று தெரிந்துகொள்வது நல்லது.
பியரர் செக் (Bearer Cheque), ஆர்டர் செக் (Order Cheque) என்று இரண்டு வகையான காசோலைகள் உள்ளன. இதில், முதல் வகையான பியரர் காசோலையில் தான் பின்புறம் கையொப்பம் வேண்டும் என்று சொல்வார்கள். மற்றொரு வகையான ஆர்டர் காசோலைக்கு பின்புறத்தில் கையெழுத்து போடுவது கட்டாயம் இல்லை.
பியரர் காசோலையை யார் வேண்டுமானாலும் வங்கியில் கொடுத்து பணத்தை வாங்கிக்கொள்ளலாம். ஆர்டர் காசோலையில், முன்பக்கத்தில் யாருடைய பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ அந்த நபர் மட்டுமே பணத்தைப் பெறமுடியும். அந்த நபர் காசோலையுடன் வங்கிக்கு வந்து, அதில் குறிப்பிட்டுள்ள நபர் தான் தான் என்று நிரூபிக்க வேண்டும். இதனால்தான், ஆர்டர் காசோலைக்குக் கையெழுத்து தேவையில்லை.
பியரர் காசோலை மூலம் மோசடியாக யாராவது பணத்தைப் பெற்றுவிட்டால், வங்கி மீது குற்றச்சாட்டு வந்துவிடும். இதைத் தவிர்க்கவே, பியரர் காசோலையைச் செலுத்துபவரிடம் பின்பக்கத்தில் கையெழுத்து பெற்றுக்கொள்கிறார்கள். இதனால், தவறான நபருக்கு பணம் கொடுக்கப்பட்டாலும் வங்கியின் பொறுப்பு ஆகாது.
சில சமயங்களில் காசோலை மூலம் பணம் எடுக்க வங்கிக்குச் செல்லும் நபரிடம் முகவரிச் சான்றும் கேட்கப்படலாம். குறிப்பாக காசோலைத் தொகை பெரியதாக இருந்தால் முகவரிச் சான்று கேட்பார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏதேனும் மோசடி நடந்தால் அந்த நபரை தொடர்பு கொண்டு மோசடி குறித்து எளிதில் கண்டுபிடிக்க முடியும்.