இதை தெரிஞ்சிக்கோங்க..! ரயிலில் இருக்கும் தலையணை & போர்வைகளை திருடினால் என்ன தண்டனை தெரியுமா ?
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்கின்றனர். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ரயிலில் பயணம் செய்யலாம். வேலை, வணிகம் மற்றும் சுற்றுலா போன்றவற்றிற்காக லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து ரயிலில் பயணிக்கின்றனர். ரயில்களில் வேகமாகவும், பாதுகாப்பகவும், சௌகரியமாகவும் பயணிக்க முடியும். இதனால் தான் நிறையப் பேர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
ரயிலின் ஏசி பெட்டியில் பயணிக்கும்போது உங்களுக்கு பெட்ஷீட், தலையணை, போர்வை, டவல் போன்ற பொருட்கள் வழங்கப்படும். உங்களுடைய பயணம் முடிந்ததும் ரயில் பெட்டியிலேயே இவற்றை விட்டுச் செல்ல வேண்டும். இது பயணிகளின் வசதிக்காக ரயில்வே தரப்பில் வழங்கப்படும் சில வசதிகள் ஆகும். இவற்றை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
நிறையப் பேர் இந்தப் பொருட்களை கையிலேயே எடுத்துச் செல்வதாக இந்திய ரயில்வேக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பயணிகள் இவ்வாறு செய்வதால் ரயில்வே துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பெட்ஷீட் மற்றும் டவல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இதுபோன்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது.
பெட்ஷீட் மற்றும் தலையணை திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, ரயில்களின் ஏசி பெட்டிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசாரம் மூலம் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை குறைக்க முடியும் என்று இந்திய ரயில்வே நம்புகிறது.
ரயிலில் இருக்கும் பணியாட்களுக்கு இந்த விஷயத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு, எந்த சீட்டிலாவது குறைந்த எண்ணிக்கையிலான துண்டுகள் இருந்தால் அதுபற்றி பயணிகளிடம் விசாரிக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படுறது.
மேலும், ரயில்வே பொருட்களை திருடுவது சட்டப்படி குற்றம். ரயில்வே பொருட்களை திருடும்போதோ அல்லது ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தும்போதோ பிடிபட்டால், ரயில்வே சொத்து சட்டம் 1966ன் கீழ் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுமட்டுமின்றி, ரயில்வே பொருட்களை சேதப்படுத்தினால் அல்லது திருடினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை என இரண்டும் விதிக்கப்படும். இதற்கான அதிகபட்ச தண்டனை ஐந்து ஆண்டுகள். அபராதம் எவ்வளவு என்பது நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும்.