1. Home
  2. தமிழ்நாடு

இதை தெரிஞ்சிக்கோங்க..! இந்தியாவில் மொத்தம் 4 வகையான பாஸ்போர்ட்கள் இருக்கு தெரியுமா ?

1

இந்திய அரசு மொத்தம் 4 வகையான பாஸ்போர்ட்களை விநியோகிக்கிறது. அதன்படி நீல பாஸ்போர்ட்,  ஆரஞ்சு பாஸ்போர்ட், வெள்ளை பாஸ்போர்ட் மற்றும் தூதரக பாஸ்போர்ட் ஆகியவை விநியோகிக்கப்படுகிறது. 

நீல நிற பாஸ்போர்ட்:

இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இது மிகவும் பொதுவான பாஸ்போர்ட் மற்றும் சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. வெளியுறவு அமைச்சகம் சாதாரண குடிமக்களுக்கு தனிப்பட்ட அல்லது தொழில்முறை தேவைகளுக்காக நீல நிற பாஸ்போர்ட்களை வழங்குகிறது.

ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்

10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இந்திய குடிமக்களுக்கு ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த பாஸ்போர்ட் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வேலை செய்ய வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறது.

1

வெள்ளை நிற பாஸ்போர்ட்:

உத்தியோகபூர்வ வேலைக்காக வெளிநாடு செல்லும் அதிகாரிகளுக்கு இந்திய அரசு வெள்ளை பாஸ்போர்ட்டை வழங்குகிறது. வெள்ளை நிற பாஸ்போர்ட் வைத்திருப்பதால், எந்த நாட்டிலும் சுங்கச் சோதனையின்போது அரசு அதிகாரிகளைப் போலவே நடத்தப்படுவார்கள். அதேசமயம் வெள்ளை நிற பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பதாரர் தனி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதில் அவருக்கு ஏன் இந்த பாஸ்போர்ட் தேவை என்று சொல்ல வேண்டும். வெள்ளை நிற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், பல சிறப்பு வசதிகளைப் பெறுவார்கள்.

ராஜாங்க பாஸ்போர்ட்:

உயர்மட்ட அரசு அதிகாரிகள், தூதர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளுக்கு ராஜாங்க பாஸ்போர்ட் வழங்கப்படுகின்றன. நாட்டில் மொத்தம் ஐந்து வகை மக்களுக்கு இத்தகைய பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. அதன்படி ராஜாங்க அந்தஸ்து பெற்றவர்கள், அரசு வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்திய அரசின் மூத்த அதிகாரிகள், வெளிநாட்டு சேவையின் (IFS) A மற்றும் B குரூப் அதிகாரிகள்,  வெளியுறவு அமைச்சகம் மற்றும் IFS பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசாங்கம் சார்பில் உத்தியோகபூர்வ பயணம் செய்யும் அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இந்த பாஸ்போர்ட் வழங்கப்படும்.

ராஜாங்க பாஸ்போர்ட் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக கருதப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பெரும்பாலான நாடுகளில் விசா தேவையில்லை. சில நாடுகளில் விசா அவசியமாக இருந்தாலும், சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் விசா கிடைக்கும். ராஜாங்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இது தவிர ராஜாங்க பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் ஒருவரை வெளிநாட்டில் கைது செய்ய முடியாது. அத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்திய தூதரகம் அல்லது தூதரகத்தை அணுகலாம். அதேசமயம் வெளிநாடுகளில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அல்லது நிலைமை மோசமடைந்தால். அந்த நிலையில் மீட்பு நடவடிக்கைகளின் போது ராஜாங்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர் முதலில் பத்திரமாக மீட்கப்படுவார்கள்.

Trending News

Latest News

You May Like