புவிசார் குறியீடு பெற்ற புளியங்குடி எலுமிச்சை! இந்த எலுமிச்சையின் தனித்துவம் என்ன தெரியுமா ?

தமிழகத்தில் மிகப்பெரிய எலுமிச்சை சந்தை எங்கு அமைந்துள்ளது தெரியுமா ? அது நம்ம புளியங்குடியில் தான் அமைந்துள்ளது. இங்கு தினமும் சராசரியாக 2000-த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் எலுமிச்சை ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். அதனால் இதற்கு லெமன் சிட்டி என்று பெயர் உண்டு.தற்போது மத்திய அரசு புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதன் மூலம் புளியங்குடியில் கிடைக்கும் எலுமிச்சை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் விளையும் எலுமிச்சை அதிக சிட்ரிக் தன்மையை கொண்டது. இதில் அதிகம் சாறுகள் கிடைக்கும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. மற்ற மாநிலங்களில் கிடைக்கும் எலுமிச்சையின் தோல் மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் புளியங்குடி பகுதியில் விளையும் எலுமிச்சையின் தோல் இயற்கையாகவே மெல்லிய தன்மை கொண்டதால் அதிக சாறு உள்ள எலுமிச்சை பழங்களாக கிடைக்கும். புளிப்பு கலந்த இனிப்பு சுவை இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எலுமிச்சை பொறுத்தவரை வெயில் காலங்களில் தான் சீசன். மழைக்காலங்களில் எலுமிச்சை வரவு குறைவாகவே இருக்கும். புளியங்குடி எலுமிச்சை சந்தை ஏப்ரல், மே மாதங்களில் அதிகப்படியான விலை கிடைக்கும். கேரளாவில் மழை தொடங்கிவிட்டால் இங்கு விலை குறைந்துவிடும்.ஒவ்வொரு கிராமங்களிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் எலுமிச்சை ஆண்டுதோறும் பயிரிடப்படுகிறது. சங்கரன்கோவில், பு புதூர், செந்தட்டியாபுரம், சிந்தாமணி, நெற்கட்டும் சேவல், வாசுதேவநல்லூர்,மாங்குடி என அதிகப்படியான கிராமங்களில் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. மண்வளம் நன்றாக உள்ளதால் இங்கு அதிகம் எலுமிச்சை சாகுபடி செய்ய முடிகிறது.
ஒரு நாளைக்கு சராசரியாக 300 டன் எலுமிச்சை ஏற்றுமதி செய்யப்படுகிறது மாதத்தை 500 டன் வரை புளியங்குடி எலுமிச்சை சந்தையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. புளியங்குடி எலுமிச்சை சந்தையில் சுமார் 25 இருக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது இதில் தினமும் 2000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் எலுமிச்சை சந்தை ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டில் சனிக்கிழமை தவிர மற்ற நாட்கள் காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை ஏலம் நடைபெறும். இதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஏலத்தில் கலந்து கொள்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் எலுமிச்சையின் வரவு, சீசன், காலநிலை பொருத்து விலை மாறுபடும். இதில் மூன்று வகையாக தரம் பிடிக்க முடியும். முதல் தரத்தில் பச்சை எலுமிச்சைகாய் கிலோ 85 ரூபாய், பழமாக இருந்தால் 75 ரூபாய் நடுத்தரமாக இருந்தால் கிலோ ரூபாய் 50 ரூபாய் விற்பனை செய்கின்றோம். சில நேரங்களில் எலுமிச்சை கிலோ 100 ரூபாய்க்கு கூட கிலோ விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
புளியங்குடி எலுமிச்சை சந்தையில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், சென்னை போன்ற மாவட்டங்களுக்கும், கர்நாடகாவில் பெங்களூர், கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. டெல்லி, நாக்பூர் போன்ற பகுதி வியாபாரிகளும் இங்கிருந்து எலுமிச்சை வாங்குவதற்கு அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் தெரிந்து கொண்டிருந்த புளியங்குடி எலுமிச்சை சந்தை தற்போது உலக அளவில் தெரிய வரும், புவிசார் குறியீடு இருப்பதன் மூலம் அதிகப்படியான ஏற்றுமதி நடக்கும் இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் உயரும்