1. Home
  2. தமிழ்நாடு

தமிழக பாஜக துணை தலைவர் நாரயணன் திருப்பதியை விளாசிய காயத்ரி ரகுராம்..!

1

கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது. தொடர்ந்து மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் நாணய வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் கலந்து கொண்டு 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட அதனை முதலமைச்சர் முக ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்றது, நூற்றாண்டு நினைவு நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட்டது என, பாஜகவும் திமுகவும் கள்ளக் கூட்டணியில் இருப்பதாக விமர்சித்து இருந்தார் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி.

இது தொடர்பாக கோவையில் பேசிய அவர்,”அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக நாங்களும் நாணயம் வெளியிட்டோம். அப்போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்தும் அவர்களை அழைக்கவில்லை. நாங்களே தான் வெளியிட்டோம். கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுவதும், நாணயம் வெளியிடுவதும் அவர்களின் விருப்பம். அதை யார் வெளியிடுவது என்பதுதான் கேள்வி. ஏன் ராகுல் காந்தியை அழைத்து வெளியிடவில்லை. ஆக இதில் இருந்து திமுக – பாஜக ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.” என கூறியிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி கருத்து குறித்து தமிழக பாஜக துணை தலைவர் நாரயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து கூறி இருந்தார். அதில்,"எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் நாணயம் வெளியிட்டபோது நாங்கள் ஆட்சியில் இருந்தும், பாஜக வை அழைக்கவில்லை. ஆனால், கருணாநிதி நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு பாஜக வை அழைத்தது ஏன்? என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவின் போது த‌மிழக‌த்தின் அன்றைய பிரதான எதிர்க் கட்சியான திமுகவை அழைத்தது அதிமுக. கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவின் போது தமிழகத்தின் இன்றைய பிரதான எதிர்க் கட்சியான பாஜகவை அழைத்தது திமுக. அவ்வளவுதான்" என கூறியிருந்தார்.

இந்நிலையில் பாஜக நாரயணன் திருப்பதிக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜகவினரை பச்சோந்திகள் என நடிகையும் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளருமான காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் பதிவில்,”அ.தி.மு.க., வாழ்க்கையில் செய்த சிறந்த விஷயம், பா.ஜ.,வை அழைக்காததுதான். இல்லையேல் மைக்கைப் பிடித்து இங்கே பூசு அப்பறோம் அங்க பூசு என்று சொல்லியிருப்பார்கள், அவர்கள் தமிழக அரசியலில் இருக்க தகுதியற்ற பச்சோந்திகள். அவர்கள் காரியகர்த்தாக்கள் அல்ல, அவர்கள் "வெட்கமற்ற காரியவாதிகள்" மட்டுமே. பாஜகவுக்கும் தமிழகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, பாஜகவுக்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என கூறியுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like