எங்கள் தலைமை அனுமதித்தால் விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார் - காயத்ரி ரகுராம்..!

அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் பேசியதாவது, "பாஜக தலைவர் பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில் அதிமுக பாஜகவுடனான கூட்டணி தவம் கிடப்பதாக வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார். பாஜக தலைவர்களுக்கு தமிழ்நாட்டு மண்ணின் வலியும் தெரியாது. தமிழ்நாட்டின் உணர்வும் புரியாது. 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமை அனுமதித்தால், தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார்.
தொகுதி மறுவரையறை என்பது பாஜகவின் சூழ்ச்சி தந்திரம். அனைத்து கட்சிகளுக்கு இதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளது. ஆனால் அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு எதிரான அனைத்து அரசியல் வேலைகளையும் செய்கிறார். பாஜக எதற்கு தமிழ்நாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை.
தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து எதை கேட்டாலும் அதை திசை திருப்புவதில் தான் திமுக ஆட்சி இருக்கிறது. தன்னுடைய மகனை எப்படி வளர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்களே தவிர இங்கிருக்கக் கூடிய மக்களுடைய பிள்ளைகளை வஞ்சிக்கிறார்கள்.
இதே ஜெயலலிதா இருக்கும்போது இதுபோன்ற குற்றச்செயல்கள் நடந்தது என்றால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு போலீஸ் அதிகாரியோ அல்லது மற்ற துறை சார்ந்த அரசு அதிகாரிகளோ தவறுகள் செய்தால் உடனடியாக அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். ஆனால் இன்று குற்றச்செயலில் ஈடுபடும் போலீசாருக்கு ப்ரமோஷன் தான் கிடைக்கிறது.என்னைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பூஜ்ஜியம்; திமுக ஆட்சியும் பூஜ்ஜியம். ஆனால் மாற்றி மாற்றி அப்பாவும் மகனும் அவர்களுக்குள்ளாகவே 100 சதவீதம் மதிப்பெண் கொடுத்துக் கொள்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.