15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கேங்க்ஸ்டர் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது..

மும்பை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்த சுரேஷ் புஜாரி கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவர் மீது மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் 23-க்கும் அதிகமான வழக்குகள் இருக்கிறது.
அவருக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டு ரெட் கார்னர் நோட்டீசும் விடுக்கப்பட்டு இருந்தது. சுரேஷ் புஜாரிக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ் வரும் 19-ம் தேதியுடன் முடிவுக்கு வர இருந்தது.
இதற்கிடையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக பிலிப்பைன்ஸில் சுரேஷ் புஜாரி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை நாடு கடத்துவதற்கான நடைமுறைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று இரவு பிலிப்பைன்சில் இருந்து டெல்லிக்கு சுரேஷ் புஜாரி நாடு கடத்தப்பட்டார்.
டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது சிபிஐ அதிகாரிகள் புஜாரியை கைது செய்து தங்களது கட்டுப்பாட்டில் எடுத்தனர். விசாரணைக்கு பிறகு அவரை மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மும்பை பயங்கரவாத தடுப்பு பிரிவு, வரும் 25-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.