இஃப்தார் நோன்பு விழாவில் சுவாரஸ்யம்..! எடப்பாடி பழனிசாமி சொன்ன அரசியல் பஞ்ச்...!

முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இஃப்தார் நோன்பில் கலந்து கொண்டார். முன்னதாக இஃப்தார் நோன்பு விழாவின் மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் விழாவில் பேசுகையில், தன்னுடைய வாழ்க்கையின் இளமை காலம் முதல் நிறைவு நாள் வரை இஸ்லாமிய நண்பர்கள் பலரை பெற்றிருந்தவர் எம்.ஜி.ஆர். தன் நண்பர் மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் தான் மேரா நாம் அப்துல் ரகுமான் என்ற பாடலை அவர் நடித்த படத்திலேயே பாடிக் காட்டியவர்.
அந்த மகத்தான மனிதரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். இஸ்லாமிய மார்க்கத்தை தவறாக சித்தரித்து திரைப்படங்களில் காட்சிகள் வெளிவந்த போதெல்லாம் உறுதிபட நின்று கடும் நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. அந்த ஒப்பற்ற இரு பெரும் தலைவர்களின் அரசியலிலே உருவாக்கப்பட்டவன் நான்.
என் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இரு பெரும் தலைவர்களின் வழியில் அரசியல் பயணம் செய்யும் நான், அவர்களை போல உங்களுக்கு உற்ற நண்பனாக சகோதரனாக பாதுகாவலனாக இருப்பேன் என்று தெரிவித்து கொள்கிறேன். ”பதவிக்காகவோ, புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் நான் அல்ல.”
பேரறிஞர் அண்ணா கூறிய படி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று எண்ணத்தில் அரசியலுக்கு வந்தவன் நான். எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும் நிலைப்பாடும் கிடையாது. சாதி மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு யாதும் ஊரே யாவரும் கேளீர் என இயல்பாகவே வாழ்ந்து வருகிறேன்.
எல்லோருக்கும் சம நீதியும், சம பாதுகாப்பும் சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று உளமாற நினைப்பவன் நான். அந்த வகையில் உங்களுக்கு எப்போதும் உற்ற தோழனாக இருப்பேன் என்பதை உறுதியளிக்கிறேன். ”என்னை நம்பாமல் கெட்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள், நம்பி கெட்டவர்கள் எவரும் இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.