இன்று முதல் இந்த வாகனங்களுக்கெல்லாம் பெட்ரோல், டீசல் கிடையாது!

இந்தியாவில் காற்று மாசு அதிகம் கொண்ட நகரங்களில் முதலிடத்தில் டெல்லி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பனி பொழிவது போல் காற்று மாசு காணப்படும். இதனால் வாழத்தகுதி இல்லாத மாநிலமாக டெல்லி மாறுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இதற்கிடையே ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தது. தற்போது டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காற்று மாசு ஏற்படுவதை குறைக்க டெல்லி அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது காலம் முடிந்த வாகனங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு இன்று ஜூலை 1ந் தேதி முதல் அமலாகிறது.
அதாவது ஜூலை 1ந் தேதி முதல் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்ப தடை விதிக்கப்படுகிறது. இது 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களுக்கும் பொருந்தும். இவை அனைத்தும் “எண்ட் ஆஃப் லைஃப்” (EOL) வாகனங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த வாகன எண்களை தானாக அடையாளம் காணும் தானியங்கி வாகன பதிவெண் ஆய்வு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தற்போது டெல்லியில் உள்ள 500 பெட்ரோல் நிலையங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் எண்கள் மூலம் எளிதில் கண்காணிக்கப்படுகின்றன. சட்டப்படி அனுமதிக்கப்படும் வயதைக் கடந்த வாகனங்கள் அடையாளம் காணப்பட்டால், பெட்ரோல் நிரப்பப்படுவதில்லை.
இதுதவிர டெல்லி அரசு பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக டெல்லியில் பாயும் நதிகளை, குடிப்பதற்கு ஏற்றதாக மாற்றுவதாக கூறி ஆட்சிக்கு வந்தது. அதற்கு என பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.