இன்று முதல் அக். 1ம் தேதி வரை 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.