தொண்டன் முதல் முதலமைச்சர் வரை - மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை..!

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். இவருக்கு பள்ளி பருவம் முதலே அரசியலில் அதீத ஈடுபாடு ஏற்படவே தனக்கென ஒரு நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கி கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
பள்ளி பருவத்தில் தனது அப்பா ஒரு பொதுப்பணித்துறை அமைச்சர் என்றால் எல்லோரும் மரியாதை கொடுப்பார்கள் என்பதால் தான் ஒரு அமைச்சரின் மகன் என்று சொல்வதை தவிர்த்து வந்தார்.
அரசியிலில் கொண்ட ஆர்வத்தினால் தனது அப்பா மு.கருணாநிதி அழைக்காமலேயே அரசியலுக்கு தாமாக விரும்பி வந்தவர் தான் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். திமுகவுக்காக ஊர் ஊராக சென்று உதயசூரியன் என்ற பெயரில் நாடகம் நடத்தி பிரச்சாரம் செய்தார்.
திருமணம் - சிறையில் அடைப்பு
1975 ஆம் ஆண்டு தனது 22 வயதில் துர்கா என்ற சாந்தாவை திருமணம் செய்து கொண்டார். கலைஞரின் மகன் என்பதால் இவருக்கு பெண் கொடுக்க பலரும் தயங்கிய போது, முரசொலி மாறன் மூலம் தான் இந்த சம்மந்தம் அமைந்தது.
பார்த்த முதல் பெண்ணே பிடித்துப் போக திருமணம் செய்து கொண்டார் மு.க.ஸ்டாலின். 1976-ஆம் ஆண்டு அவசர நிலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் அதாவது மிசா (MISA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது மு.க.ஸ்டாலின் தனது தீவிர அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
சிறையில் இருந்தபோது அவர் கடுமையாக தாக்கப்பட்டார், மேலும் அவரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருந்து சி. சிட்டிபாபு காயங்களாலும், காவல் துறையின் சித்திரவதைகளாலும் அவரைப் பாதுகாக்கும் போது இறந்து போனார். சிறையில் இருந்த போதிலும் கூடத் தனது இறுதியாண்டு பி.ஏ. தேர்வுகளை எழுதி முடித்தார்.
குடும்பத்தினர் மீது பாசம்
மு.க.ஸ்டாலின் திமுக இளைஞர் அணியை உருவாக்கினார். 1982-ஆம் ஆண்டு தொடங்கி திமுகவின் இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்துள்ளார்.
எப்போதும் கூச்ச சுபாவம் உடைய மு.க.ஸ்டாலின், மேயராகிய பின்பு தான் கூச்சத்தை நீக்கி பொதுவிடங்களில் பேச துணிந்தார்.
வி.பி.சிங் பிரதமராக இருந்த போது ஸ்டாலினின் கட்சி செயல்பாட்டையும், ஆர்வத்தையும் பாராட்டியுள்ளார். அமெரிக்கா, துபாய், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான்,லண்டன், உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார்.
ஆண்டுதோறும் மே மாதம் கோடை காலம் வந்துவிட்டால் தனது பேரன், பேத்திகளோடு குறைந்தபட்சம் 2 நாட்களாவது ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவார்.
தனது மகன் உதயநிதி ஸ்டாலின் காதல் திருமணத்தை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு நடத்தி வைத்தார். மகன், மகள் மீது பாசம் வைத்திருப்பதை போலவே மருமகள் கிருத்திகா மீதும், மருமகன் சபரீசன் மீதும் ஸ்டாலின் அதிகம் பாசம் காட்டுவார்.
அன்று எதிர்க்கட்சி தலைவர் - இன்று முதலமைச்சர்
தனது பேரன் பேத்திகளுக்கு தமிழ் பெயர் சூட்டியுள்ளதோடு கட்சி நிர்வாகிகளிடமும் தமிழ் பெயர் சூட்ட வலியுறுத்துவார்.
1973-ம் ஆண்டு தி.மு.க-வின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
2008-ம் ஆண்டு தி.மு.க-வின் பொருளாளராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.
2017-ம் ஆண்டு தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு தி.மு.க பொதுக்குழுவின் மூலம் அக்கட்சியின் செயல் தலைவரானார்.
2018 தி.மு.க தலைவர் கருணநிதியின் மறைவுக்குப் பிறகு, தி.மு.க தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியின் முதலமை்ச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்போது முதலமைச்சராக உள்ளார்.