பிஎஃப் முதல் UPI வரை..! இன்று முதல் நிகழும் முக்கிய மாற்றங்கள்..!

ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் புதிய வங்கிச் சட்டம் செயல்படுத்தப்படுவதால் வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்கு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.அதாவது ஏடிஎம்மில் பணம் எடுப்பது, சேமிப்பு கணக்கு விதிகள், கிரெடிட் கார்டு சலுகைகள் போன்றவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏடிஎம் பரிவர்த்தனை:
ஏடிஎம் பரிவர்த்னை கட்டணங்களுக்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. இதனால் வங்கிகளும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கட்டணங்களை திருத்தும். ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது மாதத்திற்கு 3 முறை இலவசமாக எடுக்கலாம். இதையடுத்து ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ரூ 20 முதல் ரூ 25 வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
சேமிப்பு கணக்கு :
அது போல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் தங்கள் கணக்குகளில் மாதாமாதம் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பு தொகையை (minimum balance) வைத்துள்ளது. இந்த தொகைக்கு கீழ் யாராவது வங்கியில் இருப்பு வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும். இது வங்கி அமைந்திருக்கும் இடத்திற்கு இடம் மாறுபடலாம். அதாவது மெட்ரோ பாலிட்டன் சிட்டி, நகர்ப்புறம், ஊரகம் என வங்கி அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து மாறுபடும்.
வங்கி மோசடி
வங்கி மோசடியை தடுக்க ரிசர்வ் வங்கி positive pay system என்ற முறையை செயல்படுத்தலாம். 50 ஆயிரத்திற்கு மேல் காசோலைகளை வழங்கும் வாடிக்கையாளர்கள், பயனாளிகளுக்கு அவர்கள் வழங்கிய காசோலைகள் பற்றிய விவரங்களை இணையத்தின் மூலம் வங்கிக்கு வழங்கிட வேண்டும்.
டிஜிட்டல் பரிவர்த்தனை
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாக்க இரட்டை காரணி அங்கீகாரம் (two-factor authentication) கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பணம் பாதுகாப்பாக இருக்கும். அது போல் சில வங்கிகள் சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை திருத்தவுள்ளன.
கிரெடிட் கார்டு
மேலும் நாளை முதல் கிரெடிட் கார்டு விதிகள் அமலுக்கு வருகின்றன. இதனால் ரிவார்டுகள், கட்டணங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். யூபிஐ கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருந்தால் வங்கி பதிவுகளில் இருந்து நீக்கப்படும். அது போல் யூபிஐ சேவைகளும் நிறுத்தப்படும்.
ஏப்ரல் 1 புதிய விலை
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றங்கள் இருக்கும். அந்த வகையில் ஏப்ரல் 1ஆம் தேதி புதிய விலை அறிவிக்கப்படும். இதில் விலை குறையவும் கூடவும் வாய்ப்புகள் உள்ளன.
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை 2 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும். அது போல் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைய விருப்பப்பட்டால் புதிய முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.
கூட்டுறவு வங்கிக் கடன்
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற பெண்களுக்கு முன்பு இருந்த கட்டுப்பாடுகள் இருக்காது. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியிலும் பல மாற்றங்கள் செய்யப்படும். வருமான வரி விலக்குகள், டிடிஎஸ், வருமான வரி தாக்கல் உள்பட வருமான வரி தொடர்பான மாற்றங்களும் அமலுக்கு வரும்.
வீட்டு கடன்
அது போல் ஏப்ரல் 1ஆம் தேதி நீங்கள் வீட்டுக் கடன் வாங்கினால் பெரிய நகரங்களில் ரூ 50 லட்சமும், நடுத்தர நகரங்களில் ரூ 45 லட்சமும் சிறிய நகரங்களில் ரூ 35 லட்சம் வரையிலும் கடன் வாங்கலாம்.