இனி கருப்பு மை பேனாவில் மட்டுமே எழுத வேண்டும் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
குரூப்-1, 1பி பணிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வில் தேர்வர்கள் கருப்பு மை பேனாவை (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல்பேனா) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
தேர்வர்கள் விடைப் புத்தகம் முழுவதும், அதாவது தேர்வு எண்ணை எழுதுதல், முதல் பக்கத்தில் கையொப்பமிடுதல், விடை எழுதுதல், படம் வரைதல், அடிக்கோடிடுதல், மேற்கோள்காட்டுதல், விடை புத்தகத்தில் பயன்படுத்தாத இடங்களை / தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான விடைகளை அடித்தல், போன்றவற்றுக்கு ஒரேவகையான கருப்பு மை பேனாவை (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல்பேனா) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
தேர்வர்கள் மேற்கூறிய தேவைகளுக்கு ஒரே வகை கொண்ட கருப்பு மை பேனாக்களை போதுமான எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டும். தேர்வர்கள் கருப்பு மை பேனாக்களை தவிர மற்ற பேனாக்களை உபயோகித்தால் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.