காவிரி பிரச்னை முதல் விவசாயக் கடன் வரை..! இபிஎஸ் அளித்த மனு..!
தூத்துக்குடி பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலமாக திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்றனர். அத்துடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை நேரில் வரவேற்றார். மேலும், தான் கொண்டு வந்திருந்த மனுவையும் பிரதமரிடம் அளித்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் ஊடகத்திடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பாரத பிரதமர் மோடியை சிரித்த முகத்துடன் வரவேற்றோம். பிரதமர் உடனான சந்திப்பு நன்றாக, சிறப்பாக இருந்தது. அவரும் எங்களுக்கு உரிய முறையில் வரவேற்றார்” என்று தெரிவித்தார். சந்திப்பின் போது மூன்று முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ளார்.
அதாவது, “விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் . தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்” என்று மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை மனுவை பரிசீலித்து ஆவண செய்வதாக எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து சந்தித்துள்ளார். 2022ஆம் ஆண்டு நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அடுத்த இரண்டாவது இடம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. அதே சமயம் அண்ணாமலையின் பேச்சைக் காரணம் காட்டி கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. 2024 மக்களவைத் தேர்தலை இரு கட்சிகளும் தனித் தனியாக எதிர்கொண்டன. எனினும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன.
.png)