அடுத்த ஆண்டு முதல் இலவச யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு !

உலகம் முழுவதும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று ஐ.நா. சபை இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டு உலகம் முழுவதும் யோகா தினம் உற்சாகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் அடுத்தாண்டு முதல் இலவச யோகா வகுப்பு தொடங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளளார். டெல்லி தலைமை செயலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அடுத்தாண்டு ஜனவரி முதல் தலைநகர் டெல்லியில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இதன்படி, யோகசாலா திட்டத்தின் கீழ், 400 யோகா பயிற்றுனர்களின் உதவியுடன், டெல்லியில் குறைந்தது 20 ஆயிரம் பேர் யோகா பயிற்சியை மேற்கொள்வார்கள். கடந்த 7 ஆண்டுகளில், நிர்வாகத்தில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.
டெல்லியில் நிறைய மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை உருவாக்கி சுகாதார துறையில் சீர்திருத்தம் உருவாக்கி உள்ளோம். நாம் மீண்டும் ஒரு புதிய பொதுநல திட்டம் ஒன்றை அறிமுகம் செய்கிறோம். இதன்படி, ஒரு படி முன்னே சென்று டெல்லி மக்கள் நோயில் சிக்காமல் இருக்கும் வகையில், அதற்கு முன்பே தடுப்பதற்கான நடவடிக்கையாக இலவச யோகா வகுப்பு அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
newstm.in