ஈஷா நடத்திய இலவச மருத்துவ முகாம்..!
உலக நீரிழிவு தினம் நவம்பர் 14-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி, அக்.29-ம் தேதி முதல் நவம்பர் மாத இறுதி வரை கோவை, சேலம், ஈரோடு, நீலகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்த ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு திட்டமிட்டுள்ளது.
அதன் தொடக்கமாக, முதலாவது இலவச பல்துறை மருத்துவ முகாம் கோவை ஆலாந்துறையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (அக்.29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிராம மக்கள் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக செய்து கொண்டனர். குறிப்பாக, ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறியும் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, கண் விழித்திரை பரிசோதனை, பாத நரம்பு பரிசோதனை போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், பொது மருத்துவம் மட்டுமின்றி நரம்பு, கண், தோல், பல், பெண்கள் நலன் ஆகிய மருத்துவங்களுக்கு தனி தனியாக சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.
இம்முகாமில் 170 பேருக்கு கண் பரிசோதனையும், 120 பேருக்கு நீரிழிவு பரிசோதனையும், 83 பேருக்கு நரம்பு பரிசோதனையும், 80 பேருக்கு தோல் நோய் சம்பந்தப்பட்ட பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 34 பேர் இலவச கண் புரை நீக்க அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்த 700 மூலிகை மரக்கன்றுகளும், மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
கோவை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், சோழா குழுமம், ராவ் மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை, ஆலாந்துறை ஈஷா தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர் இணைந்து இம்முகாமை ஏற்பாடு செய்தனர். இதேபோல், மற்றொரு இலவச பல்துறை மருத்துவ முகாம் கோவை முட்டத்துவயல் பகுதியில் ஈஷா கிராம மருத்துவ மருத்துவமனையில் நவம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.