இலவச கூப்பன் உங்களுக்காக...100 ரூபாய்க்கு கீழ் உள்ள புத்தகங்களை இலவசமாக பெறலாம்..!
எல்கேஜியோ, எம்பிபிஎஸ்சோ எந்த மாணவராக இருந்தாலும் இந்தப் புத்தக கூப்பன்களை பெற்றுக்கொள்ளலாம்.
பெங்களூரில் மூன்றாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் புத்தக கூப்பன்கள் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு கூப்பனும் 100 ரூபாய் மதிப்பு கொண்டது. எனவே வாங்கும் புத்தகத்தில் ஒரு கூப்பனுக்கு ரூ.100 தள்ளுபடி கிடைக்கும். ஒருவேளை புத்தக விலையே ரூ.100க்கு உள்ளே என்றால் புத்தகத்தை நீங்கள் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்பதுதான் இந்தக் கூப்பனின் அர்த்தமாகும்.
மொத்தம் ரூ.3 ஆயிரம் கூப்பன்கள் இதுபோலத் தரப்பட்டுள்ளன. ஆக மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கூப்பன்களை பெங்களூர் நகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரிய சேர்மேன் ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்கியுள்ளார்.
இந்தக் கூப்பன் சீட்டுகளில், “புத்தகத்தை வாசியுங்கள்! உங்கள் வெற்றிக்கு வழிகாட்டச் சகோதரனாகக் காத்திருக்கிறேன்” என்ற வாசகம் ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் படத்துடன் இடம்பெற்றுள்ளது. அதிகாரியைத் தொடர்புகொள்ள mano4india@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு இத்தனை மாணவர்கள்தான் என்ற கணக்கெல்லாம் கிடையாது. எத்தனை மாணவர்கள் வந்தாலும் கணக்கு வழக்கு இல்லாமல் கூப்பன்கள் தரப்படுகின்றன. ஒரே நோக்கம், மாணவர்கள் புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்பதுதான். தமிழ், ஆங்கிலம், கன்னடம் மொழிகளில் புத்தகங்கள் இங்குக் கிடைக்கின்றன. குயின்ஸ் சாலையில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பில்டிங்கிற்கு எதிரேயுள்ள The Institution of Engineers கட்டிட வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியும் அங்கு உள்ளன.
இடம்: இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியர்ஸ், குயின்ஸ் சாலை, பெங்களூர். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை
இந்த புத்தகத் திருவிழா, தமிழ் கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சியில் ஒரு முக்கிய படி எனலாம். தமிழ் இலக்கியம், கலை, கலாசாரம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியில் இது பெரிதும் உதவும். புத்தக ஆர்வலர்கள், குடும்பத்தினர் என அனைவரும் இந்த புத்தகத் திருவிழாவிற்கு வந்து பயன்பெறலாம்.