பக்தர்களுக்காக திருச்செந்தூரில் இருந்து இலவசப் பேருந்துகள் இயக்கம்!
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மழை வெள்ளத்தில் கடந்த மூன்று நாட்களாக சிக்கித் தவித்த பக்தர்களுக்காக இலவசப் பேருந்துகள் இயக்கப்ப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ள நிலையில், நெல்லை, நாகர்கோயிலுக்கு இலவசப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு முன்பாக, திருச்செந்தூர் வந்த பக்தர்கள் மூன்று நாட்களாக அங்கு சிக்கித் தவித்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், “கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 95% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி, நெல்லையில் வெள்ள நீர் வடிந்த இடங்களை ஆய்வு செய்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.