நூதன மோசடி : நோயாளிகளுக்கு சமைத்து கொடுப்பதற்காக கீரை வாங்கியதில் ரூ.6.59 லட்சம் மோசடி..!
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் தினந்தோறும் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் உள் நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கும், அவர்களுடன் தங்கியிருக்கும் நபர்களுக்கும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
அதன்படி, காலையில் இட்லி சாம்பார், மதியம் சாதம், சாம்பார், கீரை, தயிர், வாழைப்பழம், இரவு ரவை உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவை வழங்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் மாலை வேளையில் சுண்டல் ஆகியவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் உணவுப் பொருள்கள் வாங்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் எழுந்துள்ளது. இதில், நோயாளிகளுக்கு சமைத்து வழங்குவதற்காக கீரைக் கட்டுகள் வாங்கியதில் ரூ.6.59 லட்சம் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாம். அதாவது ஒரு கீரைக் கட்டு ரூ.25 என்பதை ரூ.80 என கணக்கு காண்பித்து மோசடி செய்யப்பட்டுள்ளதாம்.
இதனிடையே, அண்மையில் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், இந்த மோசடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.