1. Home
  2. தமிழ்நாடு

தனியார் பேருந்தின் படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்கள் பலி.. முதல்வர் இரங்கல்..!

1

செங்கல்பட்டு மதுராந்தகம் பகுதியில் ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ராமாபுரம், மோகல்வாடி ஆகிய கிராமங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்றும் வழக்கம்போல் மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல தனியார் பேருந்தின் படிக்கட்டில் நின்றவாறு பயணித்துள்ளனர். 

Accident

அப்போது தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற கண்டெய்னர் லாரி பேருந்து மீது உரசியதில் படிக்கட்டில் பயணித்த 4 மாணவர்கள் கீழே விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மாணவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த மாணவர்கள் மோனிஷ், கமலேஷ், தனுஷ் மற்றும் ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது.

Police

மேலும் 5 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சில மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிறுநாகலூர் கிராமம், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று 12.3.2024 காலை தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் தனுஷ் (வயது 21) த/பெ.முனியப்பன், கமலேஷ் (வயது 19) த/பெ.முருகேசன் மற்றும் மோனிஷ் (வயது 19) த/பெ.சிவகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர்.

மேலும், இவ்விபத்தில் ரவிச்சந்திரன் (வயது 20) த/பெ.குணசேகரன் என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என்று பதிவிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like