10-ல் 4 பேர் வாக்களிக்கவில்லை” – மாநகராட்சி ஆணையர்..!
தமிழ்நாடு மற்றும் புதுவை என 40 மக்களவை தொகுதியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு மாநிலங்களிலும் வன்முறைகள் ஏதுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது, இம்முறை வாக்குப்பதிவு சற்று குறைவாகவே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் 75.67% வாக்குகள் பாதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை மக்களவை தொகுதியில் 65.35% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற மக்களிடையே வாக்களிப்பதில் சுணக்கம் காட்டுவதே சென்னையில் குறைவான வாக்குப்பதிவுக்கு காரணம் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல், தொடர் விடுமுறை காரணமாக பலர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் வாக்களிக்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது. வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் தேர்தல் நடத்தக்கூடாது. கூடுதலாக விடுமுறை கிடைக்கிறது என மக்கள் நினைப்பதாக பாஜக தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பேட்டியளித்தார்.
இந்நிலையில், சென்னை லயோலா கல்லூரியில் EVM இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் வைக்கும் பணியை சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 100-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜூன் 4-ம் தேதி வரை தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்கும். கட்டுப்பாட்டு அறையை திறக்க 2 சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்படும்.ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த ஆண்டு சென்னையில் 4% வாக்குப் பதிவு குறைந்துள்ளது. நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். நகர்புறங்களில் வசிக்கும் மக்களில் 10-ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது", இவ்வாறு ராதாகிருஷ்ணன் பேசினார்.