கேரளா எக்ஸ்பிரஸ் மோதி தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி..!
கேரள பாலக்காடு அருகே பாரதபுழா ஆற்றின் மேல் அமைந்துள்ள ஷோரனூர் ரயில் பாலத்தில் இன்று (நவம்பர் 2) மாலை தொழிலாளர்கள் 4 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். இரண்டு பேர் ஆண்கள், இரண்டு பேர் பெண்கள். அவர்களில் தமிழர்களும் அடங்குவர். ரயில்வே தூய்மை பயணியாளர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரயில் பாலத்தில் தொழிலாளர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துள்ளது.
உடனடியாக தண்டவாளத்தில் இருந்து வெளியேற முடியவில்லை. பாலத்தின் மறுமுனைக்கு செல்வதற்குள் ரயில் அருகில் வந்துவிட்டது. இந்நிலையில் தொழிலாளர்கள் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்தில் தொழிலாளர்கள் ஆற்றில் தூக்கி வீசப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் பலியாகினர். மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரது உடலை காணவில்லை என்று கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் வள்ளி, ராணி, லக்ஷ்மண் ஆகியோர் மூவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவரின் உடலை காணாததால் யார் என்று தெரியவில்லை. உயிரிழந்த 4 பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலை பொறுத்தவரை ஷோரனூர் ரயில் நிலையத்தில் நிற்காது. எனவே அப்பகுதியில் மிக வேகமாக பயணம் செய்துள்ளது.
எனவே அந்த இடத்திற்கு தொழிலாளர்கள் ஏன் செல்லவில்லை என்ற சந்தேகம் எழுகிறது. அப்படியெனில் விபத்து ஏற்பட்டது எப்படி என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் தொழிலாளர்கள் மிகவும் கவனக்குறைவாக செயல்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.