நள்ளிரவில் லாரி- பஸ் மோதிய விபத்தில் 4 பேர் பலி!
தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தில் உள்ள பரிகியில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
முதல்வர் ரேவந்த் இரங்கல்
இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: விகாராபாத் மாவட்டம், ரங்காபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.