ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன...எனக்கென்று ஒரு வீடு கூட கட்டவில்லை - மோடி உருக்கம்!
டெல்லி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பா.ஜ., கடும் போட்டியில் உள்ளது; 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில், அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசைவாசி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் ஜூகி ஜோப்ரி (ஜேஜே) பிளாக்குகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நௌரோஜி நகரில் உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் உள்ள ஜெனரல் பிளாக் (ஜிபிஆர்ஏ) வகை-2 வீடுகள் ஆகிய இரண்டு நகர்ப்புற மறுவளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: எனக்கென்று ஒரு வீடு கூட கட்டவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டு, அவர்களின் கனவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மதுபான ஊழல் முதல் பள்ளிக்கூட ஊழல், காற்று மாசுபாடு ஊழல் என அனைத்து துறைகளிலும் ஊழலை சந்தித்து வருகிறது. டெல்லியைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி அரசு ஒரு அழிவு சக்தி. இந்த நாசகார சக்தியான ஆம் ஆத்மியை வீட்டுக்குள் விரட்டுவோம் என்று டெல்லி மக்கள் அறிவித்துள்ளனர்.
நாட்டின் தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து செயல்பட்டால், நிலைமை இன்னும் மோசமாகும்; டெல்லி சீரழிந்து போகும். டெல்லி மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2025க்குள் தலைநகர் டெல்லியில் புதிய நல்லாட்சி அமையும். மக்கள் நலன் சார்ந்த அரசியல் இனி தொடங்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.