புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன் காலமானார்..!

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ப.கண்ணன்.புதுவை அரசில் சபா நாயகர், அமைச்சர், எம்.பி. என பல்வேறு பதவிகளில் இருந்தவர்.
இந்நிலையில், முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன், நிமோனியாவால் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:51 மணி அளவில் காலமானார். இதனை அவர் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு நுரையீரல் நோய் பாதிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு வயதிலேயே தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். இவர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த போது புதுவை மாநிலம் முழுவதும் பாத யாத்திரை சென்று காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியூட்டினார்.மேலும் இவர் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த போது புதுவையின் அனைத்து கிராமங்களிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். இதனால் அவருக்கு புதுவையின் அனைத்து பகுதிகளிலும் ஆதரவாளர்கள் இருந்து வந்தனர்.
இதற்கிடையே மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி த.மா.கா. கட்சியை தொடங்கிய போது அவருக்கு கண்ணன் ஆதரவு தெரிவித்தார். மேலும் புதுவை த.மா.கா. தலைவராக இருந்து வந்தார். அதன்பிறகு புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என கண்ணன் தனிகட்சி தொடங்கினார். இதன் பின்னர் தாய் கட்சியான காங்கிரசில் மீண்டும் ஐக்கியமாகி எம்.பி.யானார்.இதன்பிறகு மீண்டும் காங்கிரசில் இருந்து விலகிய கண்ணன் அ.தி.மு.க.வில் இணைந்து சட்டசபை தேர்தலில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவரது சிஷ்யனான தற்போது அமைச்சராக உள்ள லட்சுமி நாராயணனால் தோற்கடிக்கப்பட்டார்.
அதன்பிறகு கண்ணன் அ.தி.மு.க.வில் கட்சி பணியாற்றாமல் ஒதுங்கியே இருந்தார். அதனை தொடர்ந்து கடந்த 2021 மார்ச் மாதம் டெல்லியில் மத்திய மந்திரிகள் முன்னிலையில் கண்ணன் பா.ஜனதாவில் இணைந்தார். ஆனால் அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் கடந்த 2 ஆண்டுகளாக மவுனமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில்,மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் பாஜகவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் அறவே இல்லை என சொல்ல அக்கட்சியில் இருந்து கண்ணன் விலகியது குறிப்பிடத்தக்கது.