திமுக அமைச்சரை பாராட்டிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு..!

மதுரை மாவட்டம் அழகப்பன் நகரில் மழையால் சேதமடைந்த சாலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரையில் பல்வேறு சாலைகள் மழையால் சேதமடைந்தன. சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி சீரமைக்கவில்லை. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 2 அமைச்சர்களும் மேற்கொள்ளவில்லை. மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளதால் தொற்று நோய்கள் பரவுகிறது. மதுரை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுக திறந்து வைக்கிறது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் வைகையாற்றை தேம்ஸ் நதிக்கரை போல மாற்றி இருப்போம்.
விஜய் நடித்த லியோ படத்துக்கு கூட்டம் குறைந்து விட்டது, ஆனால் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலைத்துறை கலைக்கப்படும் என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். அறநிலையத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும். பெரிய கோவில்களின் வருவாயில் தான் சிறு கோவில்கள் செயல்படுகிறது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார். அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? அறநிலையத்துறையில் தவறு இருந்தால் சுட்டி காட்டலாம், யார் யாரோ ஆட்சிக்கு வர போகிறோம் என சொல்லும் போது விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை. 2026 ல் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக கொண்ட அதிமுக ஆட்சி அமைக்கும்" எனக் கூறினார்.