முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது..? சுப்ரீம் கோர்ட் கேள்வி
தமிழகத்தில் மதுபான விற்பனை, கஞ்சா புழக்கம், வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டுச் சென்றது எனப் பல விஷயங்கள்குறித்து, அ.தி.மு.க., மாஜி அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சி.வி. சண்முகம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசி இருந்தார். அவரது பேச்சுகள் தமிழக அரசுக்கும், முதல்வரின் பெயருக்கும் களங்கம் விளைவிப்பது போல் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, சி.வி. சண்முகத்துக்கு எதிராக 4 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சி.வி. சண்முகம் மனு தாக்கல் செய்தார். 2 வழக்குகளை மட்டும் ரத்து செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட், மற்ற 2 வழக்குகளை ரத்து செய்ய மறுத்துவிட்டது. கோர்ட் உத்தரவை எதிர்த்துச் சி.வி. சண்முகம் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது; ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு எப்படி இவ்வாறு பேசமுடிகிறது? இவ்வளவு மோசமாகப் பேசிய பேச்சுக்கு ஏன் சி.வி. சண்முகம் மன்னிப்பு கேட்கக் கூடாது?
முதல்வரை விமர்சித்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதுதொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மன்னிக்க முடியாது குற்றம் என்று கருதுவதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு விசாரணை அக்டோபர் 15ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.