1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் பாஜகவில் இணைகிறார் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்..!

1

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவருமான சம்பாய் சோரன்,எனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து கடந்த 18-ம் தேதி விளக்கி இருந்தேன். முதலில் அரசியலில் இருந்து விலகிவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், மக்களின் ஆதரவு காரணமாக நான் அந்த முடிவை கைவிட்டேன். பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

வரும் 30-ம் தேதி நீங்கள் பாஜகவில் இணைய உள்ளீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சம்பாய் சோரன் ‘ஆமாம்’ என்றார். முன்னதாக, வரும் 30-ம் தேதி அன்று ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், பாஜகவில் இணைய உள்ளதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா, இது தொடர்பாக எக்ஸ் தள பதிவில், “ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசத்தின் ஆதிவாசி தலைவர்களில் ஒருவருமான சம்பாய் சோரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிகாரபூர்வமாக பாஜகவில் ஆகஸ்ட் 30-ம் தேதி அன்று அவர் இணைய உள்ளார். இது ராஞ்சியில் நடைபெற உள்ளது” என தெரிவித்திருந்தார். மேலும், அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் சம்பாய் சோரன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களுடன் கடந்த 18-ம் தேதி டெல்லியில் முகாமிட்டிருந்தார் சம்பாய் சோரன். அவர் பாஜகவில் இணைய இருப்பதாக அப்போது தகவல் வெளியாகி இருந்தது. இருப்பினும் இது குறித்து பேசிய அவர், “என்னுடைய தனிப்பட்ட வேலைகளுக்காக இங்கு வந்துள்ளேன். வதந்திகள் பரப்பப்படுவது குறித்து எதுவும் தெரியவில்லை” என்றார். ஆனால் அடுத்தடுத்த நிகழ்வுகள் அவர் பாஜகவில் இணைவார் என்ற ஊகங்களை வலுப்படுத்தியது. இந்நிலையில், வரும் 30-ம் தேதி அன்று ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், பாஜகவில் இணைய உள்ளது உறுதியாகி உள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து கடந்த ஜூலையில் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் சம்பாய் சோரன் அதிருப்தியில் இருந்தார்.

Trending News

Latest News

You May Like