இஸ்ரோ முன்னாள் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான சிவனுக்கு புதிய பொறுப்பு..!

இந்தோர் ஐஐடி வெளியிட்ட செய்தியில், ’இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், விண்வெளி துறையின் முன்னாள் செயலருமான டாக்டர் கே.சிவன், ஐஐடி இந்தோரின் கவர்னர்கள் குழுவின் தலைவராக பொறுப்பேற்பதில் பெருமை கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பதவியிலிருந்த பேராசிரியர் பி.தீபக் பாதக்கின் பதவிக்காலம் ஆக.21 அன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அந்த பதவியில் கே.சிவன் பொறுப்பேற்கிறார்.
இந்த பொறுப்பில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் நீடிப்பார். இந்த கல்வி நிறுவனத்தில் விண் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் புதிய படிப்புகள் தொடங்கப்பட்டதை அடுத்து, கே.சிவனுக்கு அங்கே புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஐஐடி இந்தோரில் விண்வெளி அறிவியல் மற்றும் பொறியியல், மேலும் அதனையொட்டிய 10 புதிய கல்வித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக பி.டெக்., விண்வெளி அறிவியல் மற்றும் பொறியியலில் வருடத்துக்கு 4 மாணவியர் உட்பட 20 பேர் சேர்ந்து பயில இருக்கின்றனர். இவர்களில் இருந்தும் இந்திய விண்வெளித்துறையின் எதிர்காலத்துக்கு தேவையான விஞ்ஞானிகளை உருவாக்க, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனின் வழிகாட்டுதல் உதவும் என இந்தோர் ஐஐடி திட்டமிட்டிருக்கிறது.