ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து..!

ஐ.பி.எல்., முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான லலித் மோடி மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளன. ஆனால், தன் மீதான வழக்கு நடவடிக்கைகளுக்கு பயந்து, பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு வராமல் வெளிநாடுகளில் சுற்றி வருகிறார். லண்டனில் சில ஆண்டுகள் இருந்த அவர், இந்திய குடியுரிமையை துறந்து பசுபிக் தீவு நாடான வனுவாட்டில் தஞ்சம் புகுந்தார். விசாரணைக்காக இந்தியாவுக்கு நாடு கடத்துவதை தவிர்க்க, வனுவாட்டில் குடியுரிமையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் லலித் மோடி மீதான மோசடி புகார் குறித்து விசாரணை நடத்த இந்திய விசாரணை அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. அவருக்கு எதிராக இன்டர்போல் உதவியுடன் நோட்டீஸ் வெளியிட அமலாக்கத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அந்நாட்டு குடியுரிமை ஆணையத்திற்கு வனுவாட் தீவு நாட்டின் பிரதமர் ஜோதம் நேபத் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போதிய சட்ட ஆதாரங்கள் இல்லாததால், லலித் மோடிக்கு எதிராக அலர்ட் நோட்டீஸ் பிறப்பிக்கக்கோரிய இந்திய அதிகாரிகளின் கோரிக்கையை இன்டர்போல் இரு முறை நிரகாரித்தது தெரிய வந்தது. இதுபோன்ற நோட்டீஸ் வரப்பெற்றாலே, லலித் மோடியின் குடியுரிமை விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்பட்டு விடும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.