பா.ஜ.க.வில் இணைந்த ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி..!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி தாவல் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மாற்று கட்சியினர் பா.ஜ.க.வில் இணைவது தொடர் கதையாக உள்ளது. இந்த சூழலில், கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் களத்தில் இறங்கி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து தனது நீதிபதி பதவியை கடந்த 5-ம் தேதி அவர் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி பதவியை ராஜினாமா செய்த அபிஜித் கங்கோபாத்யாய் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். மாநிலக் கட்சித் தலைவர் சுகந்தா மஜும்தார், சுவேந்து அதிகாரி மற்றும் பலர் முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.
பின்னர் பேசிய அபிஜித், பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் இருக்கும் புதிய உலகத்தில் நான் நுழைந்துள்ளேன். கட்சி எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் என்னால் முடிந்தவரை அதை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன்.
மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருக்கும் ஊழல் அரசை அகற்றுவதற்கான அடித்தளத்தை இந்த மக்களவை தேர்தலில் உருவாக்குவதே எங்களின் பிரதான நோக்கம். மேற்கு வங்காளம் வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வருவது அவசியம். திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம் என்று அவர் தெரிவித்தார்.
2018 முதல் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார். கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பா.ஜ.க.வில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்தார்.
இந்நிலையில் பா.ஜ.க.வில் சேர்ந்த அபிஜித் வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார் என்றும், அவர் போட்டியிடும் மக்களவை தொகுதி குறித்து விரைவில் பா.ஜ.க. அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.