முன்னாள் தி.மு.க. எம்.பி. உதவியாளர் படுகொலை!

தி.மு.க. முன்னாள் எம்.பி. குப்புசாமி. குப்புசாமியின் உதவியாளராக பணிபுரிந்தவர் குமார். 72 வயதான குமார் மார்ச் 16ம் தேதி தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். தாம்பரம் பேருந்து நிலையத்தில் சென்ற குமார் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் குமாரை கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து அவரின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சேலையூர் பகுதியில் வசித்து வரும் ரவி என்பவருக்கும், குமாருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்தது.
ரவியை பிடித்து போலீசார் விசாரித்ததில், நிலப்பிரச்சினையில் குமாரை கடத்தி கொலை செய்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே புதைத்து விட்டதாக அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ரவி மற்றும் அவரது கூட்டாளிகளான பூந்தமல்லி விஜய், செந்தில்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். குமாரின் உறவினரின் நிலத்தை அவர் பராமரித்து வந்துள்ளார். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு கோடிக்கணக்காக உள்ளது. இந்த நிலத்தை ரவி தனது கள்ளக்காதலியான தனலட்சுமி பெயரில் போலியாக பதிவு செய்துள்ளார். குமாரின் உறவுக்கார பெண்ணான மகாலட்சுமி பெயரில் ஒரிஜினல் நில பத்திரம் உள்ளது.இந்த நிலத்தை அபகரிக்க மகாலட்சுமி என்ற பெயரில் போலியாக வேறு ஒரு பெண்ணை ஏற்பாடு செய்த ரவி தனது கள்ளக்காதலி தனலட்சுமிக்கு நிலத்தை விற்பனை செய்ததுபோல் போலியாக பத்திரப்பதிவு செய்துவிட்டார்.
இந்த போலி பத்திர பதிவையடுத்து நிலத்துக்கான ஒரிஜினல் ஆவணங்களை கைப்பற்றும் நோக்கில் ரவி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குமாரை தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து காரில் கடத்தியுள்ளார். பின்னர், நிலத்தின் ஒரிஜினல் ஆவணங்களை தரும்படி குமாரிடம் காரில் வைத்து ரவி மற்றும் அவரது கூட்டாளிகள் கடுமையாக தாக்கினர். அவர் பதில் பேசாததால் குமாரை சித்ரவதை செய்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், குமாரின் உடலை காரிலேயே செஞ்சி காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு குமாரின் உடலை புதைத்த கும்பல் சென்னை திரும்பியுள்ளது. எதுவும் நடக்காததுபோல் ரவி மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் சுற்றித்திரிந்துள்ளனர். இதனையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நில பிரச்சினையில் தி.மு.க. முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.