சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதல்வர்கள்..!

மக்களவைத் தேர்தலில் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி மற்றும் பாஜக தலைவர் பசவராஜ் பொம்மை இருவரும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை சனிக்கிழமை (ஜூன் 15) ராஜினாமா செய்தனர்.
இந்த இருவரும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குமாரசாமி கர்நாடகத்தின் சன்னாபட்னா தொகுதியிலும், பசவராஜ் பொம்மை ஷிகாகோன் தொகுதியிலும் எம்எல்ஏவாக இருந்தனர்.
அண்மையில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தின் மண்டியா தொகுதியில் 8,51,881 வாக்குகள் பெற்று, அதாவது 58.3% வாக்குகள் பெற்று மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் குமாரசாமி.
தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பசவராஜ் பொம்மை ஹவேரி மக்களவைத் தொகுதியில் 7,05,538 வாக்குகள் (50.5 %) பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனால், இந்த இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட உள்ளன. தொடர்ந்து இடைத்தேர்தலும் அத்தொகுதிகளில் நடைபெறும்.