முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆயுத பூஜை வாழ்த்து..!
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், பத்தாவது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி. நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும், லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்.
சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் முதல் மூன்று நாட்கள் தீமையை அழிக்கும் சக்தி வடிவமான துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள், செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியையும், இறுதி மூன்று நாட்கள், அறிவின் வடிவமான சரஸ்வதி தேவியையும் மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள். ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழிலின் மேன்மையைப் போற்றும் வகையில் மக்கள் தத்தமது தொழிற் கருவிகளுக்கெல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளே ஆயுத பூஜையாகும்.
நவராத்திரி பண்டிகையின் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளன்று தொடங்கிடும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வணங்கி கல்வி, கலை, தொழில் போன்றவற்றை தொடங்கி வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளை கொண்டாடுவார்கள். இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.